நாடாளுமன்ற தேர்தல்: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. களம் காண்கிறது. தேர்தலில் போட்டியிடும் 10 பா.ம.க. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.

இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட்டு உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் கலந்துகொண்டு பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

பாமக கட்சியின் தேர்தல் அறிக்கையை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர். சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்குப் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதை உறுதி செய்வோம். தன்னாட்சியும், சமூகநீதியும் தழைக்கும் தமிழ்நாட்டை உருவாக்குவோம். என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். கல்வி வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். தனியார் துறை, நீதித்துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும். பெண் குழந்தைகளுக்காக தனி விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்

ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும். ஒன்றிய , மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும். நெருக்கடி நிலைக் காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை. ஒவ்வொரு மாநிலத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50% அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்த மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

சென்னையில் இருந்து திருச்சி வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை இப்போது செங்கல்பட்டு வரை 8 வழிச் சாலையாகவும், திண்டிவனம் வரை 6 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இச்சாலை முழுவதும் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவதுடன், அதன்மீது திண்டிவனம் வரை 6 வழி உயர்மட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதிகள் பாமக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

 

The post நாடாளுமன்ற தேர்தல்: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: