பொங்கலுக்கு மறுநாள் கரிநாள். பொங்கல் தினத்தன்று அறுசுவை படையல்களோடு சைவ விருந்து உண்ணும் பெரும்பான்மையான தமிழர்கள், மறுநாள் கரிநாள் அன்று பொங்கல் சோற்றுடன் ஆட்டுக்கறி சமைத்து உண்பது இப்போது வழக்கமாக உள்ளது. கரிநாளான மாட்டு பொங்கல் தினத்தன்று சமைப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே நேற்று மேலப்பாளையம் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை புகழ்பெற்ற சந்தையாகும். செவ்வாய்கிழமை நடக்கும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நேற்று ெபாங்கல் விற்பனை களைக்கட்டியது. ஆடுகளை சந்தைக்குள் கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பிலிருந்து சுமார் 2 ஆயிரம் டோக்கன் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் நேற்று குவிந்தனர்.
செம்மறி ஆடு, வெள்ளாடுகள் என பல வகை இன ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், வெள்ளாடுகளுக்கு நேற்று அதிக ‘டிமாண்ட்’ இருந்தது. ஆட்டின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. கறியின் எடை அதிகரிக்க, அதிகரிக்க விலையும் உயர்ந்து காணப்பட்டது. கறியைப் பொறுத்து ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.
மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஆடுகள் விற்பனை அதிகம் இருக்காது. அசைவ உணவை தவிர்ப்போர் அம்மாதங்களில் அதிகம் என்பது ஒருபுறம் இருக்க, ஆடுகளை வளர்க்க வாங்கி செல்வோரும் குறைவாகவே வருவர். மழைக்காலங்களில் ஆடுகளுக்கு தீவனம் வைத்து பராமரிப்பது சிரமம் என்பதால் கால்நடை வளர்ப்போரும் சந்தைக்கு வருவதில்லை. இந்நிலையில் அடுத்த வாரம் தை மாதம் பிறக்க உள்ள நிலையில், நேற்று சந்தையில் கூடுதல் கூட்டம் காணப்பட்டது.
கடந்த ஆண்டை விட விற்பனை சரிவு
மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 கோடிக்கும் மேல் வியாபாரம் நடப்பது வழக்கம். ஆனால் அந்தளவுக்கு இவ்வாண்டு வியாபாரம் இல்லை எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையை ஒட்டி மற்ற வாரங்களை விட இந்த வாரம் விற்பனை அதிகம் இருந்தது. ஆனால் பொங்கலுக்கு கூடுதல் விற்பனை நடக்கும் என எண்ணியிருந்தோம்.
கரிநாளுக்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில், கறிக்கடைக்காரர்கள் அதுநாள் வரை ஆட்டை கட்டி போட்டு தீவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடுகளை அதிகளவு வாங்க முன்வரவில்லை. மேலும் காலையில் இருந்து பெய்து வரும் தூறல் மழையும் விற்பனையை பாதிக்கிறது. பஸ் ஸ்டிரைக்கை காரணம் காட்டி சில சில்லறை வியாபாரிகள் இம்முறை ஆட்டு சந்தைக்கு வந்து சேரவில்லை.
இவை எல்லாவற்றையும் விட கரிநாள் இவ்வாண்டு செவ்வாய்கிழமையன்று வருகிறது. தை பூசம் வரவுள்ள நிலையில், ஆசாரங்களை பின்பற்றுவோர் செவ்வாய்கிழமை அசைவம் உண்ணுவதை தவிர்க்க கூடும். எனவே கறி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என்ற சந்தேகம் கறிக்கடைக்காரர்கள் மத்தியிலும் உள்ளது. எனவே பொங்கல் விற்பனை கடந்தாண்டை விட இவ்வாண்டு குறைவுதான்.’’ என்றனர்.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் விற்பனை களை கட்டியது : கிடாக்களுக்கு கூடுதல் கிராக்கி appeared first on Dinakaran.