புதுடெல்லி: தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநில சட்டப்பேரவைகளின் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னரே காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும், மாநில தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 5 மாநில தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையமும் ஆய்வு பணிகளை மேற்கொண்டது. சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு பணிகளை நேரில் சென்று தேர்தல் ஆணையம் முடித்து விட்டது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். கடந்த வாரம் மாநில தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், இன்று மதியம் ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி டெல்லியில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேர்தல் தேதியை வெளியிடுவார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக இருக்கும்.எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணி என்ற பெயரில் ஒன்றுபட்டுள்ள நிலையில், நடக்கும் முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும்.தேர்தல் 2 அல்லது 3 கட்டங்களாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் எப்போது? : இன்று மதியம் தேதி வெளியாகிறது!! appeared first on Dinakaran.