அரிசிகொம்பன் அடர்வனத்திற்குள் சென்றதால் மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

*வனத்துறை நடவடிக்கை

அம்பை : நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாஞ்சோலை விளங்குகிறது. நெல்லையில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் 3 மணி நேர பயணித்து 3500 அடி உயரத்தில் நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க மாஞ்சோலைக்கு செல்லலாம். அதற்கு மேல் சுமார் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், பசுமை மாறாக் காடுகள் நிறைந்துள்ளன.

மாஞ்சோலை முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பி விட வேண்டும். தனியார் வாகனங்களில் செல்ல வேண்டுமானால் அம்பாசமுத்திரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மாஞ்சோலை அரசுப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்ட வாட்ச் டவரில் ஏறி நின்று பார்த்தால் நாலாபக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் மலை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

மாஞ்சோலைக்கும் மேல் ஊத்து வழியாக குதிரைவெட்டிக்கு செல்லலாம். குதிரைவெட்டியை சுற்றிலும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த ஊரின் வாயிலிலே இடதுபுறம் உள்ளடங்கி ஒரு மேடான இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு தங்குவதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். விடுதியில் தங்க விரும்புவார்கள் முன்னதாக அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாஞ்சோலை அருகில் உள்ள ஊத்து, நாலுமுக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அரிசிக்கொம்பன் யானை அட்டகாசம் செய்தது. இதனால் கடந்த 19ம் தேதி முதல் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்தது. இதையடுத்து வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பிறகு அரிசி கொம்பன் யானை அப்பர் கோதையாறு மலைப்பகுதி அடர்வனத்திற்குள் விரட்டி அடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் அரிசி கொம்பன் யானையால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாது. யாரும் அச்சப்பட தேவையில்லை என்பதை வனத்துறை உறுதி செய்தது. இதனால் நேற்று முதல் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

The post அரிசிகொம்பன் அடர்வனத்திற்குள் சென்றதால் மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: