“அவர் நன்றி மறந்தவர்”: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது: எச்.ராஜா சாடல்

தென்காசி: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக இல்லாவிட்டால் இன்றைக்கு அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதும் பட்டாசு வெடித்து கொண்டாடியது பெரிய விசயமல்ல, பாஜக கவலைப்படவில்லை. பட்டாசு வெடிக்க 10 பேர் போதும்; 2 திராவிட கட்சிகளும் இல்லாமல் நாங்கள் கூட்டணி அமைத்து 20% வாக்குகள் பெற்றோம். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக.

அதிமுக வெளியேறியதால் பாஜகவுக்கு நஷ்டம் இல்லை; இருந்தாலும் ஒரு நண்பர் செல்வதை ஐயோ பாவம் என்று பரிதாப்படலாம் என்றார். பொது எதிரியின் வாக்குகள் சிதறாமல் இருக்கத்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. கொள்கை ரீதியாக கூட்டணிக்கு சம்பந்தம் இல்லை என்றும் எச்.ராஜா குறிப்பிட்டார். அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. நந்தவனத்தில் ஓர் ஆண்டி,அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, இபிஎஸ் அதை போட்டுடைத்தான்டி என்று சொல்லும்படி உள்ளது.

இதை அதிமுக-வினர் தாமதமாக உணர்வார்கள்; அது நடக்கும் என்றும் எச்.ராஜா கருத்து தெரிவித்தார். நாங்கள் ஒட்டி வைக்காவிட்டால் அதிமுக நெல்லிக்காய் மூட்டை; அவர்கள் பெரிய சாதனை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தனித்தனியாக பிரிந்து கிடந்தவர்களை ஒன்று சேர்த்தவர்கள் நாங்கள் எனவும் எச்.ராஜா குறிப்பிட்டார். மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜக உள்ளது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருக்கிறது. அதிமுக எங்கே உள்ளது? அதிமுக இன்றோடு முடிந்தது என்றும் எச்.ராஜா காட்டமாக கூறினார்.

The post “அவர் நன்றி மறந்தவர்”: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது: எச்.ராஜா சாடல் appeared first on Dinakaran.

Related Stories: