ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது: பொதுப்பணித்துறை அறிக்கை

சென்னை: ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்காக தமிழக அரசு முயற்சி செய்வதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், எண்.12, வருவாய் கிராமத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களின் புல எண்கள், வகைபாடு, நில உரிமையாளரின் பெயர் மற்றும் நிலங்களின் பரப்பு ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல எண். 82/2ஏல் உள்ள 0.35.5 ஹெக்டேர் (0.87 ஏக்கர்) பரப்பிலான நிலம் வருவாய் துறையின் ஆவணங்களின்படி தீர்வை ஏற்படாத தரிசு என பதியப்பட்டுள்ளது.

புல எண். 82/2ஏ2ல் உள்ள 0.08.5 ஹெக்டேர் (7.62 ஏக்கர்) பரப்பிலான நிலம் வருவாய் துறையின் ஆவணங்களின்படி ரயத்து புஞ்சை எனவும், வேம்புடை அம்மன் கோலுக்கு சொந்தமானது என பதியப்பட்டுள்ளது. புல எண். 97/3ல் உள்ள 11.74.0 ஹெக்டேர் (29.00 ஏக்கர்) பரப்பிலான நிலம் மேய்க்கால் புறம்போக்கு என நீண்ட காலமாக இருந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு வழங்கப்பட்டு, தற்போது 20 ஏக்கர் நிலம், சென்னை மெட்ரோ ரயில் கழகத்திற்கு கான்கீரிட் தயாரிப்பு பணிகளுக்காக தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், முட்டுக்காடு கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் ஏதும் இல்லை. எனவே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்காக தமிழக அரசு முயற்சி செய்வதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு பொதுப்பணித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது: பொதுப்பணித்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: