×

கடனை திருப்பித் தராததால் காரை பறித்த வாலிபர் அடித்துக் கொலை பரமக்குடியில் 3 பேருக்கு வலை

பரமக்குடி: பரமக்குடியில் கடனை திருப்பித் தராததால், காரை பறித்துக் கொண்ட வாலிபரை அடித்துக் கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பரமக்குடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ்(37). இவர் சென்னை மேட்டுக்குப்பம் பகுதியில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தேவராஜ் கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராக பரமக்குடி வந்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு எம்ஜிஆர் நகரில் உள்ள தனது நண்பர் கோபி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தேவராஜ், தனது உறவினரான பன்னீர் என்பவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். பணம் பெற்றுக் கொண்ட பன்னீர் அதை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், அவருடைய காரை தேவராஜ் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து பன்னீர், தேவராஜிடம் அடிக்கடி தகராறு செய்து காரை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தேவராஜ் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தேவராஜை, பரமக்குடி எம்ஜிஆர் நகரில் உள்ள பன்னீரின் உறவினர் முனீஸ்வரி இல்லத்திற்கு வரவழைத்து பேசி உள்ளனர். பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டு பன்னீர். அவரது உறவினர் தமிழ், வினித் ஆகியோர் தேவராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பன்னீர் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : Paramakudi ,
× RELATED பரமக்குடி பகுதியில் மரக்கன்று நட்ட எம்எல்ஏ