தேனி: எதிரும், புதிருமான டிடிவியையே கூட்டணியை சேர்த்துட்டீங்க… என்னையும் அதிமுகவுல சேர்த்துங்கோங்க என எடப்பாடி காலில் விழாத குறையாக ஓபிஎஸ் பேட்டியளித்து உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்பி தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் நான் போட்டியிட முக்கிய காரணமே நமக்கு ஆதரவாக தொண்டர்கள் இருக்கிறார்களா, மக்கள் இருக்கிறார்களா என்பதை அறியத்தான்.
அங்கு நான் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 12 நாட்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டேன். அந்த தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரைக் கொண்ட ஆறு பேரை நிற்கச் செய்து சதி நிகழ்த்தப்பட்டது. அந்த சூழ்ச்சி எல்லாம் முறியடிக்கப்பட்டது. தனி கட்சி துவங்குவதற்காகவும், தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் இந்த இயக்கம் துவங்கப்படவில்லை. பிரிந்து கிடக்கக்கூடிய அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியில் தொண்டர்களின் உரிமைகளை காக்க சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேவையில்லாமல் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ‘‘பிரிந்திருப்பவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிறீர்கள். கடம்பூர் ராஜூ, கட்சி ஒன்றாக தானே இருக்கிறது என கூறியிருக்கிறாரே’’ என கேட்டபோது, ‘‘பிரிந்து இருக்கிறார்களா, ஒன்றாக இருக்கிறார்களா என்பது கடம்பூர் ராஜூவுக்கே தெரியும்’’ என்றார்.
‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் நீங்கள் இணைய வேண்டும் என பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக அழைப்பு விடுப்பதாக டிடிவி.தினகரன் கூறியிருக்கிறாரே’’ என கேட்டபோது, ‘‘நட்பின் அடையாளமாக டிடிவி.தினகரன் கூறியிருக்கிறார். அவர், ‘அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார். அதைத்தான் நானும் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன்.
எதிரும், புதிருமாக இருந்த டிடிவி.தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் ஜனநாயக கூட்டணியில் இணைந்து இருக்கிறார்கள். நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டும் என சொல்லி இருக்கிறோம். இணைய வேண்டும் என்ற கோரிக்கையை டிடிவி.தினகரன் மறுக்கமாட்டார். அவரும் அந்த கருத்தை அங்கு வலியுறுத்த வேண்டும். நானும் இணைய வேண்டுமென்று தான் சொல்கிறேன். அவரும் இணையணும்னு சொன்னா இணைத்து விடலாம்ல. அந்த வேலையை செய்தால் அதிமுக மாபெரும் வெற்றியை அடையும்’’ என்றார்.
‘‘உங்களின் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் திமுகவில் சேர்ந்து விட்டார்களே’’ என கேட்டபோது, ‘‘இரண்டாவது தர்மயுத்தமே மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் சொல்லித்தான் துவங்கப்பட்டது’’ என்றார். ‘‘இந்த இயக்கத்தை கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லையா’’ என கேட்டபோது, ‘‘இதைத்தான் சொல்கிறேன். உங்களது கருத்தை திணிக்காதீர்கள்’’என சற்று ஆவேசத்துடன் கூறினார்.
‘‘மூன்று முறை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுகவிற்கு நன்றி கடன் செலுத்துவதற்கு இதுவே சரியான தருணம். நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியிருக்கிறாரே’’ என கேட்டபோது, ‘‘நான் ரெடி, அவர்கள் ரெடியா என டிடிவி.தினகரனிடம் கேட்டுச் சொல்லுங்கள்’’ என்றார்.
* பிப்ரவரியில் நல்ல முடிவு
கூட்டத்தில் நடந்த விபரங்கள் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘கூட்டத்தில் 1996ம் ஆண்டு நான் (ஓபிஎஸ்) தேர்தலுக்கு வந்தபோது தேர்தல் செலவு என்பது வேறு. இப்போது நிலைமையே வேறு. தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்தால் பலர் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையாக இருக்க வேண்டும். வருகிற பிப்ரவரி முதல் வாரத்திற்குள் நல்ல முடிவை தெரிவிப்பேன் எனக்கூறி நிர்வாகிகள், தொண்டர்களை ஓபிஎஸ் சமாதானப்படுத்தினார்’’ என்றனர்.
* நீங்க வில்… நாங்க அம்பு… துண்டு சீட்டால் சலசலப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் நடேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் நடேசன் பேசுகையில், ‘‘உங்கள் பின்னால் அனைவரும் நிற்கிறோம் நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். நீங்கள் வில்லாக இருக்கும் நிலையில் நாங்கள் அம்புகளாக நீங்கள் நினைக்கக்கூடிய செயலை செய்யக் கூடியவர்களாக நாங்கள் இருக்கிறோம். சென்றவர்களை பற்றி கவலை இல்லை. இங்கே இருப்பவர்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்.
வந்திருப்பவர்கள் அனைவருக்கும் துண்டு சீட்டு வழங்கப்படும். அதில் எந்த கூட்டணி, யாருடன் சேருவது என்பது குறித்து அனைவரும் கருத்துக்களை பதிவிட்டு சொல்லுங்கள். அதனை தலைவரிடம் ஒப்படைப்போம் அவர் முடிவை வெகு சீக்கிரத்தில் அறிவிப்பார்’’ என்றார். இதனை கேட்டதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து அமைதியாக இருந்தனர்.
சிலர் துண்டு சீட்டுக்கு முறை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் உருவானதும், அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நின்று ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினார். ஆனாலும், துண்டு சீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர்.
