கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் ரூ.1 கோடி செலவில் பெரிய ஏரி சித்தேரி தூர்வாரி சீரமைப்பு பணி: காஞ்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஜன.30: கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் ரூ.1 கோடி செலவில் பெரிய ஏரி, சித்தேரி தூர்வாரியை சீரமைக்கும் பணியினை எழிலரசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் தாலுகா கோவிந்தவாடி, அகரம் கிராமத்தில் பெரிய ஏரி, சித்தேரி என 2 ஏரிகள், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த, 2 ஏரிகளுக்கும் மழைக்காலங்களில் பாலாற்றிலிருந்து கம்ப கால்வாய் வழியாக நீர் நிரம்பி வருகிறது. இதன்மூலம், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்நிலையில், ஏரிகளில் மதகு கரை, நீர்வரத்து கால்வாய் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளதால், அரசு சீரமைப்பு தரவேண்டும் என கிராம மக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு நீர்வளத் துறையின் மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கோவிந்தவாடி, அகரம் பெரிய ஏரியில் கரைகளை பலப்படுத்தவும், மதகுகளை சீரமைக்கவும், கலங்கள் மற்றும் வெள்ளநீர் போக்கி உள்ளிட்டவற்றை சீரமைத்து, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணி செய்ய உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி கோவிந்தவாடி, அகரம் கிராம ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும், 1000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ஏரி சீரமைப்பு பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவித்தார். பின்னர், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டு, விரைவில் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டன், ஒன்றிய செயலாளர், படுநெல்லி பி.எம்.பாபு, ஒன்றிய கவுன்சிலர் லோகு தாஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: