சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் 5 நாள் இலவச சிகிச்சை: கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் 5 நாட்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று இன்று கேரள சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் கே.என். பாலகோபால் கூறினார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு: தொழில் உறுதித் திட்டத்திற்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ. 1,000 வழங்கப்படும். பெட்ரோல், டீசல் ஆட்டோ வைத்திருப்பவர்கள் மின்சார ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும். அவர்கள் வாகனம் வாங்குவதற்கு பொதுத்துறை வங்கியில் கடன் வாங்கியிருந்தால் வட்டியில் 2 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் ஏற்படுத்தப்படும். புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஓய்வூதியத் தொகை ரூ. 1000 அதிகரிக்கப்படும். சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் 5 நாட்கள் அரசு மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு விபத்து இன்சூரன்ஸ் ஏற்படுத்தப்படும்.

இடுக்கி மாவட்டம் கட்டப்பனை முதல் தேனி வரை சுரங்கப்பாதை ஆய்வுப் பணிகளுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்படும். பம்பை நதியை தூய்மைப்படுத்துவதற்காக ரூ. 30 கோடி ஒதுக்கப்படும். பத்திரிகையாளர் மாத ஓய்வூதியம் 11,500 ரூபாயில் இருந்து 1500 உயர்த்தப்பட்டு 13 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: