பெங்களூரு: உடை மாற்றும் அறையில் பெண்ணை செல்போன் மூலம் படம் பிடித்த வழக்கை ரத்து செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த 2024ம் ஆண்டு ஆடை வாங்குவதற்காக 28 வயது பெண் ஒருவர் சென்றிருந்தார். அங்குள்ள உடை மாற்றும் அறைக்கு அந்தப் பெண் சென்றபோது, அறையின் கதவில் இருந்த இடுக்கு வழியாக கடையின் பொறுப்பாளராக இருந்த 19 வயது இளைஞர் ஒருவர் தனது செல்போன் மூலம் அந்தப் பெண்ணை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதை கவனித்த அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்ட நபர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு 19 வயது தான் ஆகிறது என்றும், அவரது செல்போனில் புகைப்படங்கள் எதுவும் சிக்கவில்லை என்றும் வாதிட்டார். இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது தீர்ப்பில், ‘டிஜிட்டல் ஆதாரங்களை எளிதாக அழிக்க முடியும் என்பதால், முழு விசாரணை மூலமே உண்மையை கண்டறிய வேண்டும்.
ஜவுளிக்கடைகளில் இதுபோன்ற செயல்களை அனுமதித்தால் பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே இருக்கிறது? இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே தவறு செய்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்று கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் இருக்கும்போது வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
