×

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தங்களினால் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: பல்வேறு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா கையெழுத்திட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை திறக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் தேசிய மாணவர் படையின்(என்சிசி) பேரணியில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முழு உலகமும் இந்தியாவின் இளைஞர்களை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. அந்த நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள காரணம் திறமை மற்றும் கலாச்சாரம்.

டெல்லி செங்கோட்டையில் நடந்த குடியரசு தின விழாவில் பேசும்போது இதுதான் சரியான நேரம் என்று உரையாற்றினேன். நாட்டின் இளைஞர்களுக்கு, இது அதிகபட்ச வாய்ப்புகளுக்கான நேரம். இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் மேலும் மேலும் பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் நீங்கள் பார்த்த ஒரு உதாரணம் இதுதான்.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதற்கு முன்பு, ஓமன், நியூசிலாந்து, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நமது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளைத் திறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : EU ,PM Modi ,New Delhi ,Modi ,India ,European Union ,National Cadet Corps ,NCC ,Delhi ,
× RELATED வடகலை, தென்கலை பிரச்னை விவகாரம்...