வெற்றி மீது வெற்றி வந்து சேர வேண்டுமா?

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று ஒரு பாடலைக் கேட்டு இருப்பீர்கள். அப்படி வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேர வேண்டுமானால், உங்கள் முயற்சி ஸ்தானம் எனும் வெற்றிஸ்தானம் பலமாக இருக்க வேண்டும். அது என்ன வெற்றி ஸ்தானம்? முயற்சி ஸ்தானம்? மூன்றாம் இடம் (லக்கினத்திலிருந்து மூன்றாம் பாவம்) தான் முயற்சிஸ்தானம். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’’ என்பார்கள். பொதுவாகவே திருமணத்தின் போது ஜாதகம் பார்க்கின்றவர்கள், குடும்பஸ்தானத்தைப் பார்ப்பார்கள். களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடத்தைப் பார்ப்பார்கள். மாங்கல்ய ஸ்தானம் எனப்படும் எட்டாம் இடத்தைப் பார்ப்பார்கள். புத்திர லாபம் கிடைக்குமா என்று ஐந்தாம் இடத்தைப் பார்ப்பார்கள்.

எல்லாம் சரிதான். ஆனால், மூன்றாம் இடத்தைப் பார்க்காமல் கோட்டை விட்டுவிட்டால், பாக்கி இடங்களும் அடிபட்டுவிடும். காரணம், திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் சிலர் மூன்றாம் இடத்தைக் கவனிப்பதில்லை. மூன்றாம் இடம் என்பது வீரியஸ்தானம். அந்த இடம் சிறப்பாக இல்லை என்று சொன்னால், அது திருமணத்தில் மிகப்பெரிய பாதிப்பையும், தோஷத்தையும் ஏற்படுத்தும். பல சிக்கல்களை, கணவன் மனைவி உறவுப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்த முடியாத சூழல் இருக்கும். இவைகளுக்கெல்லாம் காரணம், மூன்றாம் இடம் பலவீனமாக இருப்பதுதான். ஐந்தாம் இடத்திற்கு, லாபஸ்தானம் மூன்றாம் இடம் என்பதை மறந்துவிட வேண்டாம். அதுபோலவே, களத்திரஸ்தானம் எனப்படும் ஏழாம் இடத்திற்கு, மூன்றாம் இடம் பாக்கியஸ்தானமாக அமையும். ஆசைகள் நிறைவேறும் பதினோராம் இடத்திற்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமாக மூன்றாம் இடம் அமையும். இதைவிட இன்னொரு முக்கியமான சிறப்பு என்னவென்றால், லக்னம் என்பது உயிர் அல்லவா, அது மூன்றாம் இடத்திற்கு 11-ஆம் இடமாக அதாவது லாபஸ்தானமாக அமையும். எனவே, மூன்றாம் இடத்தை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

மூன்றாம் இடம் என்பது இளைய சகோதரத்தையும் குறிக்கும். இளைய சகோதரம் சிலருக்குக் கெட்டிருக்கும். கெட்டிருக்கும் என்று சொன்னால், சகோதரர்கள் இருந்தும் இல்லாதது போல் இருப்பார்கள். உறவு கெட்டு இருக்கும். இல்லாவிட்டால், தூரத்தில் இருப்பார்கள். ஒருவருக்கொருவரிடம் கொடுக்கல் வாங்கல் இருக்காது. சிலர், பகை கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு அமைப்பு இருக்கும் அல்லது இளைய சகோதரரே இருக்க மாட்டார். ஜாதகர், தான் வீட்டில் கடைசி குழந்தையாக இருப்பார்.

அவருக்குப் பின்னால் ஏதாவது குழந்தை பிறந்து இருந்தாலும்கூட, இவருடைய ஜாதக ராசி அமைந்த பின் சகோதரம் நிலைக்காமல் இருக்கும். என்னுடைய ஜாதகத்திலேயே மூன்றுக்குரிய கிரகம் விரயத்தில் புகுந்ததால், நான்தான் எங்கள் வீட்டில் கடைசி. எனக்குப் பின்னால், ஒரு குழந்தை பிறந்து சில நாட்களிலேயே இறந்து போனது என்று என்னுடைய தாயார் சொல்லி இருக்கிறார். பின் சகோதரம் இல்லை. காரணம், மூன்றாம் இடம் கெட்டுவிட்டது. ஆனால், இளைய சகோதரத்துக்கு இந்த மூன்றாம் இடத்தை மட்டும் பார்க்கக் கூடாது. காரக கிரகமாகிய செவ்வாயையும் பார்க்க வேண்டும். என்னுடைய ஜாதகத்தில், செவ்வாயும் பலவீனமாக இருக்கிறார். அதனால் இளைய சகோதரன் இல்லை.

மூன்றாம் இடம் லாபஸ்தானத்தோடு இணைந்தால், அவர்கள் செய்கின்ற முயற்சி பலிக்கும். முயற்சியை விடாமல் செய்வார்கள். அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் எவ்வளவு வந்தாலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று தொடர் முயற்சி செய்வார்கள். வெற்றியும் பெற்று விடுவார்கள். மூன்றாம் இடத்தோடு குரு சுக்கிர பார்வைகள் இருந்தால், அவர்களுடைய முயற்சிக்கு நிச்சயம் நல்ல வருமானம் இருக்கும். மூன்றாம் இடம் தகவல் தொழில்நுட்பம், எழுத்து, பத்திரிகை முதலிய விஷயங்களையும் குறிக்கும். என் ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் குரு அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக மூன்றாம் இடத்தைப் பார்ப்பார் அதாவது தனுசு ராசியில் குரு அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக மேஷ ராசியைப் பார்ப்பார்.

மேஷராசி எனக்கு மூன்றாம் இடம். என்னுடைய தகவல் தொடர்புகளில் சில நல்ல ஆதாயங்களை அடைந்திருக்கிறேன். உடல் உறுப்புக்களில் காதுகள், கழுத்து, தோள்கள் ஆகிய உறுப்புகளை மூன்றாம் இடத்தைக் குறிக்கும். என் நண்பர் ஒருவருக்கு மூன்றாம் இடம் கெட்டது. நரம்பைக் குறிக்கும் புதனும் சற்று பலவீனமாக அவருடைய ஜாதகத்தில் இருப்பார்.அவருக்கு புதன்தசை வந்த போது இரண்டு பிரச்னைகள் வந்தன, ஒன்று, கழுத்தில் ஏதோ நரம்பு சுளுக்கிக் கொண்டது. அதனால் அவர் மருத்துவரைப் பார்த்து அவர் சில சிகிச்சைகளைச் செய்து, இப்பொழுது கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது அவருக்கு காது பிரச்னையும் வந்தது. தற்சமயம் காதில் ஒலிக் கருவியைப் பயன்படுத்துகின்றார்.

இரண்டாம் இடம் கெட்டால், கண் பாதிப்பு. மூன்றாம் இடம் கேட்டால் காது பாதிப்பு வரலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாம் இடத்துக்கு உரியவர் அஷ்டமாதிபதி நட்சத்திரத்திலயோ, அஷ்டமாதிபதியின் சேர்க்கையுடனோ அல்லது அஷ்டமத்தில் அமர்ந்தாலோ பார்த்தாலோ நிச்சயமாக இந்தப் பிரச்னைகள் அவர்களுக்கு வரும்.ஜாதகத்தில், காம த்ரிகோணங்கள் என்று மூன்று ராசிகளைச் சொல்லுவார்கள் அதாவது லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம், ஏழாம் இடம், 11ஆம் இடம். இவைகளை காமத் திரிகோண ராசிகள் என்பார்கள். அதில் முதல் காமத் திரிகோண ராசி, மூன்றாம் இடம். எனவேதான் திருமணப் பொருத்தத்தில் முதலில் மூன்றாவது இடத்தை பரிசீலிக்க வேண்டும். பொதுவாக ஒரு ஜாதகத்தில் 3,6,10,11 ஆம் பாவங்கள் கிரகங்கள் இருப்பது அவருடைய வளர்ச்சியைக் குறிக்கும். மூன்றாம் இடத்தில் ஒரு கிரகம் அமர்ந்தால், அது நேராக 9ஆம் இடத்தைத் தான் பார்க்கும்.

காலபுருசனுக்கு மூன்றாம் இடத்துக்கு உரியவர் புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு உரியவர் குரு. புதன் குரு சேர்க்கை ஆகாது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. ஒருவருக்கு நல்ல ஞானமும், பேச்சுத் திறமையும், கல்வி கேள்விகளில் சிறப்பும், ஆன்மிக ஈடுபாடும், சொல்லாற்றலில் சிறப்பும் ஏற்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு நிச்சயம் குரு புதன் அமைப்பு இருக்கும். இது கிட்டத்தட்ட பத்திரயோகம், சரஸ்வதி யோகம் போலவே செயல்படும். கல்வியிலும் தொழிலிலும் இந்த யோகம் வெற்றி அடைய வைக்கும். படைப்பாற்றலுக்கும் எழுத்தாற்றலுக்கும் இந்த அமைப்பு மிகவும் முக்கியம். ஆனால், அதே நேரத்தில் இவர்கள் பங்குச்சந்தை, சீட்டு கம்பெனி முதலிய விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையோடு இயங்க வேண்டும். மூன்றாம் இடத்தைக் குறித்து, இன்னும் பல ரகசியங்கள் உண்டு. தொடர்ந்து பார்ப்போம்.