நாசரேத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாசரேத் : நாசரேத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சை பெற அரசு மருத்துவமனை இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் நாசரேத்தில் அரசு மருத்துவமனை இன்றைய சூழலில் அத்தியாவசிய தேவையாக உள்ளது.

இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படாத வகையில் தீவிர சிகிச்சை அளித்து மனித உயிர்களை காப்பாற்ற அரசு மருத்துவமனை உடனடியாக தேவைப்படுகிறது. இதற்காக பல ஆண்டுகளாக நாசரேத் மக்கள் போராடி வருகின்றனர் என்ற போதிலும் இன்று வரை நாசரேத்தில் அரசு மருத்துவமனை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாசரேத் நகரமானது கல்வியில் சிறந்து விளங்குகிறது. இங்கு தனியார் பள்ளிகள், ஐ.டி.ஐ., கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி என தொழில்துறை படிப்புகளில் மேலோங்கி நிற்கிறது.

நாசரேத்தில் கல்வி பயின்றவர்கள் இன்று உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் உயர்ந்த நிலையில் உள்ளனர். 18 வார்டுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் அரசு மருத்துவமனை என்பது இப்பகுதி மக்களின் கனவாக உள்ளது.

இதுகுறித்து மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளரும், நாசரேத் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான ஐஜினஸ்குமார், பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலர் பெனிட்ரோ தினகரன், மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக மாணவரணி செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கூறியதாவது: நாசரேத்தில் அரசு மருத்துவமனை இல்லாததால் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

நாசரேத் மக்கள் அரசு மருத்துவமனை செல்ல வேண்டுமானால் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் எதிர்பாராத வாகன விபத்துகள் ஏற்படும் போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் கொண்டு சென்று, அங்கு டாக்டர்கள் முதலுதவி செய்து தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் சுமார் 40 கிலோமீட்டர் செல்வதற்குள்ளதாக அநேக உயிர் இழப்புகள் நிகழ்கிறது.

நாசரேத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் எந்தவித கட்டணமுமின்றி அல்லது மிகக்குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளே மக்களின் நம்பிக்கையாக திகழ்கின்றன. மேலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு காப்பீட்டுத்திட்டங்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்) மற்றும் இலவச மருத்துவப்பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகள் மூலமாகவே அடித்தட்டு மக்களைச் சென்றடைகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத் கேவிகே சாமி சிலை அருகே ஆழ்வார்திருநகரி யூனியனுக்குட்பட்ட மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஓய்வு பெற்றதும் அதுவும் மூடப்பட்டது. நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்களின் நலன் கருதி நாசரேத்திலும் புதிதாக அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

எனவே இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான 24 மணிநேர தீவிர சிகிச்சை பிரிவுகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: