*நேர கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை
நாகர்கோவில் : குமரியில் தொடர் விபத்துகள் காரணமாக, இனி இரவு 10 மணிக்கு பிறகே டாரஸ் லாரிகள், கனரக வாகனங்கள் குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக கனரக வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழைய கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மாவட்டத்துக்குள் வர தடை உள்ளது. ஆனாலும் தடையை மீறி கனரக வாகனங்கள் நுழைகின்றன. இதனால் விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன.
இதே போல் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் காரணமாகவும் விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதை தடுக்க போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி விதிமுறை மீறும் கனரக, டாரஸ் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
போலீசார் மேற்கொண்டு வரும் சோதனையில் கனிமவளத் துறையின் அனுமதியின்றி கனிம வளம் எடுத்துச் செல்லும் டாரஸ் லாரிகள், அதிகபாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், சரியான வாகன சான்றிதழ் இல்லாத வாகனங்கள், குறைபாடுள்ள நம்பர் பிளேட் பொருத்தி இருத்தல் உள்ளிட்ட விதிமுறை மீறல் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபராத விதிப்பு மற்றும் வாகனங்கள் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இரவு 9 மணிக்கு பின் டாரஸ் லாரிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக டாரஸ் லாரிகள் மூலம் விபத்துகள் அதிகம் நடந்து வருகின்றன.
குறிப்பாக பைக்குகளில் செல்பவர்கள் டாரஸ் லாரியில் சிக்கி உயிரிழப்பு, படுகாயம் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.இது தொடர்பான புகார்கள் காரணமாக, தற்போது இரவு 9 மணிக்கு அனுமதி என்பதை மாற்றி, இனி இரவு 10 மணிக்கு பிறகே டாரஸ் லாரிகள் மாவட்டத்துக்குள் நுழைய வேண்டும் என எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே டாரஸ் லாரிகளுக்கு அனுமதி உண்டு. இதை நடைமுறைப்படுத்த சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக டாரஸ் லாரிகள், கனரக வாகனங்கள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
