டெல்லி: இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தாகி உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் சொகுசு கார்கள் முதல் உணவு பொருட்கள் வரை விலை அதிரடியாக குறைய உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு இந்தியா தற்போது 70% முதல் 110% வரை இறக்குமதி வரி விதிக்கிறது. இந்த இறக்குமதி வரி 10% ஆக குறைய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சொகுசு கார்களின் விலை அதிரடியாக குறைய உள்ளது.
குறிப்பாக பென்ஸ் ஜி கிளாஸ் தற்போது 3 முதல் 4 கோடி வரை விற்பனையாகும் நிலையில் இறக்குமதி வரி குறைப்பால் 2 முதல் ரூ.2.80 கோடிக்கு விற்பனையாகும். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வகை கார் 1 கோடி வரை, ரேஞ்ச் ரோவர் கார் ரூ.80 லட்சம் முதல் 1.72 கோடி வரை குறைய வாய்ப்பு உள்ளது. போர்ஷே 911 வகை கார் ரூ.1.5 கோடி வரையும், பிஎம்டபிள்யு i7, ஆடி RS Q8 வகை கார்கள் ரூ.72 லட்சம் வரையும் குறைய உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் ரூ.1.28 கோடி முதல் 2.15 கோடி வரையும், லம்போர்கினி Urus ரூ.1.28 கோடி வரையும், ஃபெராரி Purosangue ரூ.1.70 கோடி வரையும் குறைய உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சொகுசு கார்களை தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதியாகும் ஒயின்களுக்கான வரி 150%லிருந்து 75%ஆக குறைக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 20% ஆக குறைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஐரோப்பிய ஒயின்களில் விலை இந்தியாவில் கணிசமாக குறையும். ஸ்ப்ரீட் மது மீதான இறக்குமதி வரி 150%லிருந்து 40%ஆகவும், பீர் வகைகள் 110%லிருந்து 50%ஆகவும் குறைய வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் 2.5 யூரோக்களுக்கு குறைவான விலை கொண்ட ஒயின்களுக்கு இந்தியாவில் வரி சலுகை கிடையாது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் மீதான வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளின் ரொட்டி, பிஸ்கட் மீதான வரி நீக்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், செம்மறி ஆடு இறைச்சி உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரி நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான மாட்டு இறைச்சி, கோழிக்கறி மீதான இறக்குமதி வரி 110%லிருந்து 50%ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
