திருத்தணியில் நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்: வருவாய் துறையினர் நடவடிக்கை

திருத்தணி, ஜன.28: திருத்தணியில், வீடுகளை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வருவாய்த்துறையினர் பொக்லைன் மூலம் கோயில், அங்கன்வாடி மையம் உள்பட 5 வீடுகள் நேற்று இடித்து அகற்றினர். திருத்தணியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா நிலங்களை வீட்டு மனைகளாக போட்டு விற்பனை செய்யப்பட்டது. சாய்பாபா நகர் என்று பெயர் சூட்டி அப்பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருத்தணியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், திருத்தணியில் நீர்பாசனத்துறைக்கு சொந்தமான ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில் 40 அடிகள் கொண்ட நீர் ஓடையை ஆக்கிரமித்து ஏரிக்கு மழைநீர் செல்ல வழியின்றி அனைத்து நீரோட்ட பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு செல்லும் நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்ற வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்ற வேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, வருவாய்த்துறை சார்பில் சாய்பாபா நகரில் 2வது தெருவில் வசிக்கும் குடும்பங்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். கடந்த மாதம் 7ம் தேதி பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இருப்பினும், சர்வே எண் 93/3 முழுமையாக ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் வீடுகள் இடிக்க தடை விதிக்கக்கோரி சென்னை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் சீராய்வு மனு செய்துள்ளனர். இதனால், கோயில் அங்கன்வாடி மையம் மற்றும் ஐந்து வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றாமல் வருவாய்த்துறையினர் விளக்கு அளித்தனர். இந்நிலையில், சீராய்வு மனுவை நில நிர்வாக ஆணையர் தள்ளுபடி செய்தார்.

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் முன்னிலையில், நீர்ப்பாசன துறையினர் சாய்பாபா நகருக்கு செல்லும் முகப்பு பகுதியில் இருந்த பட்டி விநாயகர் கோயில், அங்கன்வாடி மையம் மற்றும் ஐந்து தளம் போட்ட வீடுகள் பொக்லைன் மூலம் இடித்து தரைமட்டம் செய்யப்பட்டு சுமார் 1 கோடி மதிப்பிலான 5 ஆயிரம் சதுர அடிகள் நிலம் மீட்கப்பட்டது. வீடுகள், கோயில் மற்றும் அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டதால் நேற்று காலை திருத்தணியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: