ஊட்டி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின கிராமமான வெள்ளரிக்கொம்பை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (53) என்கிற கிட்னா. இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர் 30 ஆண்டுகளாக தனது கேன்வாஸ் மற்றும் துணி ஓவியங்கள் மூலம் குறும்பர்களின் கலைத்திறனை தனி ஒருவராக பிரபலப்படுத்தினார். 6ம் வகுப்பு வரை படித்த கிருஷ்ணன் ஓவியங்களை வரைய இலைகள், குச்சிகள், புற்கள், விலங்குகளின் சாணம் மற்றும் மண்ணிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதியன்று காலமானார். குறும்பர்களின் கலை வடிவத்தை பாதுகாக்க அதற்கு புவியியல் குறியீடு பெற பெரும் முயற்சி எடுத்து வந்தார். ஆர்.கிருஷ்ணன் என்கிற கிட்னாவிற்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் அவரது குடும்பத்தினரும், அவர் சார்ந்துள்ள பழங்குடியின சமுதாய மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மறைந்த ஓவியர் கிருஷ்ணனின் குடும்பத்தினர் தற்போது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பகுதியில் வசித்து வருகின்றனர். ஓவியர் கிருஷ்ணனின் மனைவி சுசீலா கூறியதாவது:ஆலு குறும்பர் ஓவிய கலையில் சிறந்து விளங்கிய எனது கணவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அவர் உயிரோடு இருந்தபோது இந்த விருது கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் இல்லாதது எங்களுக்கு வருத்தமாக உள்ளது.
எங்கள் மூத்த மகள் வாசுகி கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். மகன் ராகுல் 9ம் வகுப்பும், மகள் கீதா 7ம் வகுப்பும், கீர்த்திகா 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனது மூத்த மகளின் கல்லூரி கட்டணத்தைகூட என்னால் கட்ட முடியாமல் 4 பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன். அரசு உதவிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
