சிவகங்கை மாவட்டத்தில் சருகணியாறு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சிவகங்கை, ஜன.26:சிவகங்கை மாவட்டத்தில் சருகணியாறு நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு மற்றும் முறைகேடான வகையில் வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு சுமார் 300ஏக்கர் நிலம மீட்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகணி ஆறு ஆக்கிரமிப்பை அகற்றி ஆற்றை சீரமைக்க வேண்டும் என கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் உள்ள அலவாக்காண்மாயில் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், சேகரமாகும். இங்கிருந்து வெளியேறும் நீர் சருகணி ஆறாக தொடங்குகிறது.

சிவகங்கை அருகே நகரம்பட்டி, பாகனேரி வழியாக தேவகோட்டை அருகே சருகணி வழியாக இந்த ஆறு செல்கிறது. அங்கு நாட்டார் கால்வாயுடன் இணைந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் செல்கிறது. இவ்வாறு சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 63 கி.மீ தூரம் இந்த ஆறு பயணிக்கிறது. ஆற்றில் மொத்தமுள்ள 11அணைக்கட்டுகள் மூலம் 7ஆயிரத்து 810 எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஏராளமான கண்மாய்களுக்கு நீர் கொடுத்த ஆறு அடையாளம் இல்லாமல் போனது.

சருகணியாற்றின் நீர் வழிப்பகுதி மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. இதையடுத்து சருகணியாற்றின் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து சருகணி ஆறு தோன்றும் அலவாக்கண்மாயில் இருந்து தேவகோட்டை அருகே சருகணி வரை ஆற்றின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை டிஜிட்டல் ஜி.பி.எஸ் கருவி மூலம் நில அளவீடு செய்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த 2024ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து ஆற்று வழித்தடம் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றி, சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. சீரமைக்கப்பட்ட பகுதிகளில் மரம் நடும் பணி ஊரக வேலை திட்ட பணியாளர்களால் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் ஆற்று வழித்தடத்தை தனி நபர்கள் பெயர்கள் பட்டா வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து சிவகங்கை அருகே பெருங்குடி, அலவாக்கோட்டை, ஒக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு அரசு நீர் வழங்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு சுமார் 300 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் அரசு புறம்போக்கு சருகணியாறு என பெயர் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலை பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாலாறு, சருகணியாறு, நட்டாறு கால்வாய், வைகையாறு, உப்பாறு, பாம்பாறு, தேனாறு, விருசுழியாறு ஆகிய ஆறுகள் உள்ளன.

பெயரளவில் சுமார் ஒன்பது ஆறுகள் இருந்தாலும் இவைகளில் சிலவற்றில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகப்படியான மழை பெய்யும் காலங்களில் மட்டுமே நீர் செல்லும். இந்நிலையில் சருகணியாறு ஆறு என்ற தோற்றமே இல்லாமல் ஆக்கிரமிப்பால் மாறிப்போனது. சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு நிலங்கள், தனியார் பெயரில் வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு அந்த நிலங்களும் மீட்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது போல் தொடர்ந்து மற்ற நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளையும் மீட்க வேண்டும் என்றார்.

Related Stories: