பள்ளி செல்லும் சாலை பணி துவக்கம்

தேவகோட்டை, ஜன.26: தேவகோட்டை வட்டம் புளியால் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்லும் சாலை பல வருடங்களாக முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் இந்த சாலையானது சிவகங்கை -ராமநாதபுரம் மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

இந்த சாலை வழியாக மடந்தேந்தல், அம்மனி, பாப்பாங்கோட்டை, சிறுகை மற்றும் நெய்வயல் இலுப்பக்குடி போன்ற பல்வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை. ஆனால் மாவட்ட எல்லை காரணமாக புதிய சாலை அமைப்பதில் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 19ம் தேதி தினகரன் நாளிதழ் செய்தி வெளியானது.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையை சரி செய்து தரக்கோரி பல முறை மனு அளித்துள்ளோம். நீண்ட காலமாக இந்த சாலையால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வந்தோம். தினகரன் செய்தி வெளியானதால் உடனடியாக பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும் பணிகளை போர்க்கால முறையில் துரித படுத்தி விரைந்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: