மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக்காற்றுதான் நம்மை வாழ வைத்து கொண்டு இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

காஞ்சிபுரம்: ‘மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உரையாற்றினார்.

மேலும் முதலமைச்சர் ஆற்றிய உரையில் :“சேனை ஒன்று தேவை! செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை! பெருஞ்சேனை ஒன்று தேவை” என்று தமிழைக் காக்க முழக்கம் கேட்டதும், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே!” என்று தமிழ்நாட்டின் வீதிகளில் இறங்கிப் போராடி, தங்களுடைய உயிரையும் தந்து, தாய்த்தமிழைக் காத்து, நாம் அனைவரும் இன்னும் தமிழராய்த் தன்மான உணர்வுடன் தலைநிமிர்ந்து நடைபோடக் காரணமான, மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!”, “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்து மறைந்த மொழிப்போர் மறவர்களுக்கு வீரவணக்கம்!

திராவிட இயக்கத் தீரர்களே! நீங்கள் உருவாக்கிக் கொடுத்த நிலத்தில்தான் நாங்கள் வாழ்கிறோம்! மொழிப்போர் வீரர்களே! உங்கள் மூச்சுக் காற்றுதான் இப்போதும் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது! தமிழ்த்தாயின் தியாகப் பிள்ளைகளே! தலைப் பிள்ளைகளே! உங்களை வணங்குகிறேன்!

எழுச்சியோடும் உணர்ச்சியோடும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

ஆண்டுதோறும் இந்த ஜனவரி 25-ஆம் நாளை மொழிப்போர்த் தியாகிகளை நினைவுகூரும் வகையில் வீரவணக்க நாளாக கடைப்பிடித்துக் கொண்டு வருகிறோம்! இன்று, தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர்த் தியாகிகள் கூட்டம் இதேபோன்று நடந்து கொண்டிருக்கிறது! நான் காஞ்சி மாநகருக்கு வந்திருக்கிறேன். சாதாரண காஞ்சிக்கா வந்திருக்கிறேன்? பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைத் தந்த காஞ்சிக்கு வந்திருக்கிறேன்! நம்மை எல்லாம் ஆளாக்கிய அன்பின் தெய்வம் அண்ணாவின் காஞ்சிக்கு வந்திருக்கிறேன்! அஞ்சி அஞ்சி வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து, “ஏ தாழ்ந்த தமிழகமே!” என்று கேட்டு, இன உணர்வை ஏற்படுத்திய நம் அண்ணன் பிறந்து வளர்ந்த இந்தக் காஞ்சி மண்ணுக்கு வந்திருக்கிறேன்!

வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. அதில், அண்ணாவைப் பார்த்தால், எனக்கே சில நேரம் பொறாமையாக இருக்கும்! ஏன் தெரியுமா? பெரியாரைப் போன்ற குருவும் – கலைஞரைப் போன்ற சிஷ்யனும் கிடைத்த ஒரே தலைவர் பேரறிஞர் அண்ணாதான்! எல்லாத் தாயும், தன்னுடைய பிள்ளைக்குப் பெயர் வைப்பார்கள். ஆனால், நம் தாய்நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்த தலைமகன் பேரறிஞர் அண்ணாதான்! அப்படிப்பட்ட அண்ணாவின் ஊரில், அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேசுவதே, எனக்குக் கிடைத்த பெருமை.

மிக மிக உணர்ச்சிமயமான மனநிலையில் இங்கு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்! என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோன்று இருந்த உந்துசக்தி எது என்று கேட்டால், அது இந்தக் காஞ்சி நகரம்தான். என்னுடைய 13 வயதிலேயே கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. அமைப்பை ஏற்படுத்திப் பல நிகழ்ச்சிகளை நான் நடத்திக் கொண்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்! அந்த வகையில், 1971-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கும் நினைவிடத்தில், மலர்வளையம் வைத்து வணங்கி, அங்கிருந்து, அண்ணா ஜோதியை கையில் ஏந்தி, தொடர் ஓட்டமாகப் புறப்பட்டு, காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டு இருந்த தி.மு.க. மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கரத்தில் கொண்டு வந்து நான் அண்ணா ஜோதியை ஒப்படைத்தேன். அப்போது, நம்முடைய தலைவர் கலைஞருக்குப் பக்கத்தில் அன்றைய பொதுச்செயலாளர் நாவலரும், கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர். அவர்களும் இருந்தார்கள். கையில் அண்ணா சுடரேந்தி அன்று தொடங்கிய ஓட்டம், இப்போது வரை ஓயவில்லை! அதே காஞ்சிக்குத்தான், இன்றைக்கு மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வந்திருக்கிறேன்.

மொழிப்போர்த் தியாகிகளை நினைத்தாலே – அவர்களின் பெயரை சொன்னாலே, உணர்ச்சி பொங்குகிறது! உடல் நடுங்குகிறது!

1938-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு முடிந்த மறுநாள் – மொழிப்போர்க் களத்தின் முதல் வீராங்கனையாகப் பெண்களை அணிதிரட்டிப் போராடினார் வீரத் தமிழன்னை தருமாம்பாள்!

25.01.1964-இல் தீக்குளித்து இறந்து, மொழிக்காக உயிரைக் கொடுத்த இளைஞர் கீழப்பழுவூர் சின்னச்சாமி, கழகத்தின் தொண்டர்!

1965-ஆம் ஆண்டு, ஜனவரி 25, சென்னை கோடம்பாக்கத்தில், சிவலிங்கம் என்ற 21 வயது இளைஞரும் தீக்குளித்தார். அவர் திராவிட முன்னேற்றக் கழக நுங்கம்பாக்கம் பகுதிப் பொருளாளர்.

அதற்கு மறுநாள் விருகம்பாக்கம் அரங்கநாதன் தீக்குளித்தார். அவர் ஒன்றிய அரசின் தொலைபேசித் துறை ஊழியர். தி.மு.க. தொண்டர். இந்த அரங்கநாதன் பெயரில்தான், சென்னை தியாகராயர் நகரில், ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ இருக்கிறது. அதை அமைத்தவர் தலைவர் கலைஞர்.

27.01.1965 சிதம்பரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரத் தியாகி ஆனார், அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.எஸ்சி மாணவர் சிவகங்கை ராசேந்திரன். 18 வயதே ஆன அந்த மாவீரனுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக வாசலில் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் தலைவர் கலைஞர்.

கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மாணவரான பீளமேடு தண்டபாணி, 1965 பிப்ரவரியில் நஞ்சுண்டு – விஷத்தை அருந்தி இறந்தார்.

அதே பிப்ரவரி மாதம் சத்தியமங்கலம் முத்து என்ற தி.மு.க. தொண்டர் தீக்குளித்தார்.

அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் 11.02.1965 அன்று தீக்குளித்தார். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் இளைஞர் மன்றம் நடத்தியவர்.

கீரனூரைச் சேர்ந்த முத்து, 1965 பிப்ரவரி மாதம் நஞ்சுண்டு இறந்தார்.

22 வயதான விராலிமலை சண்முகம் எனும் தி.மு.க. தொண்டர் 25.02.1965 அன்று விஷத்தை அருந்தி இறந்திருக்கிறார். அவர் ஒரு மளிகைக் கடை ஊழியர். திருச்சி – பாலக்கரையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்திற்கு, கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக ‘சின்னச்சாமி – சண்முகம் பாலம்’ என்று பெயர் சூட்டினார் முதலமைச்சர் கலைஞர்.

இவர்கள் அனைவருக்காகவும் மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் அமைத்தோம். சென்னையில் உள்ள மிக முக்கியக் கட்டடங்களில் ஒன்றுக்கு மொழிப்போர்த் தியாகிகளான தாளமுத்து – நடராசன் ஆகிய இருவர் பெயரையும் சூட்டினார், தலைவர் கலைஞர். இன்றைக்குக் காலையில் கூட, நான் நேரடியாக சென்று, அந்தக் கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தாளமுத்து – நடராசன் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இவர்கள்தான் தமிழ்த்தாயின் தலைப்பிள்ளைகள் – தியாகத்தின் திருவுருவங்கள்! மொழியைக் காக்கப் போராடிய நம்முடைய கழகம், ஆட்சி அமைத்ததும், இருமொழிக் கொள்கைச் சட்டம் நிறைவேற்றினார் நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா! இன்றைக்கு வரை யாராலும் அதைத் தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை!

எப்படியாவது இந்தியை நம் மீது திணிக்க வேண்டும் என்றுதான் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த ஒரு கும்பல் துடியாகத் துடிக்கிறது! தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதே, இந்தியைத் திணிக்கத்தான். நேரடியாகத் திணிக்க முடியவில்லை என்று, பள்ளி – பல்கலைக்கழகங்கள் மூலமாகத் திணிக்க முயற்சி செய்கிறார்கள்! சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது அவருடைய செயல்பாடு! தமிழ்நாட்டிற்குள் இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன காரணத்துக்காக, நமக்குத் தர வேண்டிய 3 ஆயிரத்து 548 கோடி ரூபாய் நிதியைத் தராமல் இருப்பவர்தான் இந்த பிரதான்! 3 ஆயிரம், 5 ஆயிரம், ஏன் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொன்னவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து செல்ல, நாம் என்ன அடிமைகளா? அண்ணா, கலைஞர் போன்ற தமிழ்ப் போராளிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்! அதுமட்டுமல்ல, மொழிப்போர் வீரர்களான நடராசன் – தாளமுத்து – ராசேந்திரன் போன்றவர்களின் கொள்கை உணர்ச்சி எனக்குள் ஓடிய காரணத்தினால்தான், அப்படி சொன்னேன்!

1938-இல் இருந்து இந்தி திணிப்புக்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தி என்பது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுப் படையெடுப்பு! இந்தியா முழுவதும் இந்தியின் ஆதிக்கத்துக்கு எத்தனை மொழிகள் பலியானது? இந்தியை ஒதுக்கி, நாம் ஆங்கிலத்தை தொடரச் செய்ததால் தமிழ்நாடு எப்படி வளர்ந்தது என்று கடந்த ஆண்டு நான் ஒரு கடிதத் தொடர் எழுதினேன். இந்திய அளவில் அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மொழிபேசும் மக்கள், என்னுடைய பதிவுகளுக்குக்கீழ் தங்களுடைய மொழி இந்தியால் அழிந்தது எவ்வாறு என்று பகிர்ந்து கொண்டார்கள். அதுபோன்று தமிழ்நாட்டை அடிமைப்படுத்த வேண்டும் என்றுதான் காலந்தோறும் டெல்லி நம் மீது படையெடுத்து வருகிறார்கள்! நாம் பார்க்காத படையெடுப்பா! நீங்கள் எத்தனை முறை வந்தாலும் சரி, எத்தனை துரோகிகள், அடிமைகள், அரசியல் கோமாளிகள், கோழைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது!

உறுதியுடன் சொல்கிறேன்… டபுள் எஞ்சின் என்று சொல்லி வடமாநில மக்களை ஏமாற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் உங்கள் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது! 2021-இல் பெற்ற தோல்வியில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாமல், மறுபடியும் கொத்தடிமைக் கூட்டமான அ.தி.மு.க.வின் தோளில் அமர்ந்து பா.ஜ.க. வருகிறது.

நேற்று முன்தினம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு சென்றிருக்கிறார். இனி, அடிக்கடி இந்தப் பக்கம் பிரதமர் மோடி அவர்களை எதிர்பார்க்கலாம்! தேர்தல் சீசன் வந்துவிட்டால் போதும், தமிழ்நாட்டுக்கு வந்து பல வெரைட்டியில் அவர் வடைகளைச் சுடுவது வழக்கம்தான்! இந்த முறையும் வந்தார்! வழக்கமான பழைய வடைகளைத்தான் சுட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்! அந்த மாவும் புளித்துப் போய்விட்டது! அதைக் கேட்டுக் கேட்டுத் தமிழ்நாட்டு மக்கள் காதும் புளித்துப்போய்விட்டது!

பிரதமர் வருகிறார் என்று சொன்னதும் சில கேள்விகளை நான் எழுப்பியிருந்தேன். நீங்கள் அனைவருமே ஊடகங்களில் அதைப் பாத்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3 ஆயிரத்தி 548 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்?

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

பா.ஜ.க.வின் முகவர்போன்று செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு பதிலாக, மாநிலங்கள் மேல் நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் புதிய திட்டம் எப்போது கைவிடப்படும்?

பத்தாண்டுகளாக ‘இஞ்ச் இஞ்ச்’-ஆக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைக்கும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போதுதான் எங்கள் கண்முன் வரும்?

இயற்கைப் பேரிடர்களுக்கான நிவாரணத் தொகை தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்?

ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி எப்போது கிடைக்கும்?

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் ஓடுமா? என்று,

இவ்வாறு அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டேன்! இது எதற்குமே பிரதமர் மோடி அவர்கள் பதில் சொல்லவில்லை. இருந்தால்தானே சொல்வதற்கு! ஆனால், தேர்தல் குறித்த தன்னுடைய கற்பனைகளைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே… கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நினைவிருக்கிறதா? உங்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு நீங்கள் அத்தனை முறை வந்து பிரசாரம் செய்தீர்களே? அதற்குப் பரிசாக, முழுமையான தோல்வியைத் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குப் பரிசாகக் கொடுத்தது மறந்துவிட்டதா?

உங்கள் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தாரே! அவர் என்ன வெறும் பழனிசாமி என்று நினைத்துவிட்டீர்களா? அவர் சாதா பழனிசாமி இல்லை! ‘தி கிரேட்’ பத்துத் தோல்வி பழனிசாமி! 2019-இல் இருந்து அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைத் தவிர வேறு எதையும் காணாத மாவீரர்! இப்படி ஒரு பெயிலியர் கும்பல் சேர்ந்து கொள்கையால் இணைந்திருக்கும் தி.மு.க. கூட்டணியை வீழ்த்தப் போகிறார்களாம்!

தமிழ்நாட்டில் NDA அரசு வரப்போகிறதாம், வளர்க்கப்போகிறதாம், பாடுபடப்போகிறதாம்! இதை எவ்வாறு பிரதமரால் சிரிக்காமல் சொல்ல முடிகிறது? நன்றாக கவனியுங்கள்… அ.தி.மு.க. அரசு இல்லை! அவர்களே இப்போது NDA அரசு என்றுதான் சொல்கிறார்கள்! நீங்கள் வந்து வளர்க்கும் நிலையிலா நாங்கள் இருக்கிறோம்? தமிழ்நாடு ஏற்கனவே வளர்ந்துதான் இருக்கிறது. நாளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது! இதை நீங்கள் கெடுக்காமல் இருந்தாலே போதும்!

தமிழ்நாடு, பொருளாதாரத்தில், தொழில் முதலீட்டில், கல்வியில், வேலைவாய்ப்பில், மருத்துவத்தில், சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒன்றிய அரசாலேயே மறைக்கவோ, மறுக்கவோ முடியாத அளவிற்கு வளர்ந்திருக்கிறது. உங்கள் புள்ளிவிவரங்களே அதைத்தானே சொல்கிறது.

பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டை அழிக்கும் உங்கள் எண்ணம் பலிக்காது. பக்தர்கள் மனம் மகிழும் ஆட்சியை நடத்துகிறோம். காஞ்சிபுரம், கோயில்கள் நிறைந்த நகரம். இங்குக் குழப்பம் ஏற்படுத்த நினைத்தால், அந்த எண்ணம் நிறைவேறாது. நாடும், நாட்டு மக்களும் அமைதியாக வாழும் இந்த நிலை, சிலருக்கு பிடிக்கவில்லை. நாட்டின் பிரதமரே இந்த நோக்கம் கொண்டவராக இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

தமிழ்நாட்டில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாகிவிட்டது என்று பொத்தாம் பொதுவாகப் பிரதமர் பதவியில் இருந்து அவர் பேசிவிட்டுச் செல்வது சரியல்ல! நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட 11 ஆயிரத்தி 311 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் பிடிபட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. அதில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில துறைமுகங்களில்தான் சிக்கியிருக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள்? தி.மு.க.வா? இல்லையே! உங்கள் ஆட்சிதானே நடக்கிறது? டபுள் எஞ்சின் என்று சொல்லும், டப்பா எஞ்சின்-தானே அங்கு ஓடுகிறது? இந்தியாவுக்குள் போதைப் பொருள் நுழைவதைத் தடுக்க வேண்டியது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான். இந்த ஸ்டாலின் இல்லை. மகாராஷ்டிரா சென்று பேச வேண்டியதை, மதுராந்தகத்திற்கு வந்து பேசிவிட்டுச் செல்வது நியாயமா?

அடுத்து, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று வேறு பிரதமர் அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். புதுமைப்பெண், விடியல் பயணம், உரிமைத்தொகை, தோழி விடுதி என்று பெண்களுக்காக நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களால் பெண்களின் சமூகப் பங்களிப்பு தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது! அதிகமான மாணவிகள் கல்லூரிகளுக்குப் படிக்க வருவது தமிழ்நாட்டில்தான்! இந்தியாவிலேயே அதிகமான பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பது தமிழ்நாட்டில்தான். இது எதுவும் தெரியாமல், ஆளுநர் ரவி போன்றே பிரதமர் அவர்களும் பேசுவது மிகமிக கண்டனத்துக்குரியது.

ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது உங்கள் குஜராத் அரசுதானே? உலகமே அதிர்ச்சி அடைந்தார்களே! உச்சநீதிமன்றமே அதை இரத்து செய்ததே! நீங்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா? அதுவும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என்று சட்டமன்றத்தில் தடைச்சட்டம் நிறைவேற்றி இருக்கும் இந்த ஸ்டாலின் அரசைப் பற்றி நீங்கள் பேசுவதற்கு உங்களுக்கு யோக்கியதை இருக்கிறதா? அருகதை இருக்கிறதா? குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்று பிரதமர் அவர்கள் பேச நினைத்தால், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் சென்றுதான் பேச வேண்டும்! மணிப்பூரில் சென்று கூட பேசுங்கள்!

இன்னொரு கூத்து என்ன என்றால், அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் குற்றமே நடக்கவில்லை என்று சொல்லி அ.தி.மு.க. தொண்டர்களையும் பிரதமர் ஏமாற்றப் பார்த்திருக்கிறார். குஜராத் மோடியா? இந்த லேடியா? என்று தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சென்று அம்மையார் ஜெயலலிதா கேட்டார்கள் தெரியுமா? அதெல்லாம் மறந்துவிட்டதா? “இந்தியாவிலேயே அ.தி.மு.க அரசுதான் ஊழல் அதிகம் நடக்கும் அரசு” என்று நீங்களும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் பேசியதாவது ஞாபகம் இருக்கிறதா? இது அனைத்தையும் நீங்கள் மறந்திருக்கலாம், தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். வழக்கம் போன்று, இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.விற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சிறப்பாகச் செய்து அனுப்பத்தான் போகிறார்கள்!

மோடி அவர்கள் இந்த மண்ணில் கால் வைத்ததுமே உதயசூரியனே மறைந்துவிட்டதாம், மழை வந்துவிட்டதாம்! சொல்வது யாரு? நம்முடைய பழனிசாமி, பத்துத் தோல்வி பழனிசாமி! வாழ்க்கை முழுவதும் கால்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால், சூரியன் எப்படி உங்கள் கண்களுக்குத் தெரியும் பழனிசாமி அவர்களே? ஒருமுறையாவது தலைநிமிர்ந்து பாருங்கள்! அப்போதுதான் சூரியனின் இருப்பும், பவரும் உங்களுக்கு தெரியும்!

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்துகொண்டு வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற பெயரைக் கேட்டாலே, ஓடி ஒளியும் கோழைகள் தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வாறு காப்பாற்றுவார்கள்? பா.ஜ.க.வின் ஏவல் படையாகச் செயல்படும் புலனாய்வு அமைப்புகளை வைத்துக் கொண்டு, தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கலாம், பணிய வைக்கலாம் என்று நினைத்தால், மக்கள் ஆதரவுடன் அதை எதிர்கொள்ளும் உறுதி தி.மு.க.விற்கு இருக்கிறது! நாங்கள் பணிய மாட்டோம். துணிந்து ஒரு கை பார்ப்போம்! மண் – மொழி – மானம் காத்திடும் எங்கள் ஈராயிரம் ஆண்டுப் போரை தொடர்ந்திடுவோம்!

2026 தேர்தல் களமும் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம்தான்! தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலி பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதிசெய்யும் களம்தான், இந்தக் களம்!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணிலிருந்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, கழக உடன்பிறப்புகளே, கூட்டணித் தோழர்களே, தோழமை இயக்கத்தவர்களே, உங்கள் பரப்புரையை இன்றே தொடங்குங்கள். ஐந்து ஆண்டுகளாக நாம் மக்களுக்குச் செய்துகொண்டு வரும் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், திராவிட மாடல் அரசு தொடர வேண்டும்! உத்தரப் பிரதேசம் போன்று, மணிப்பூர் போன்று, தமிழ்நாடு வன்முறைக் காடு ஆகாமல் தடுக்கப்பட வேண்டும். திராவிட மாடல் அரசு தொடர, கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க, மொழிப்போர் ஈகியர்களின் தியாகத்தின் மீது உறுதி எடுப்போம்! பேரறிஞரைத் தந்த அண்ணாவின் காஞ்சியில் இருந்து நான் உறுதியாகச் சொல்கிறேன். டெல்லியின் ஆதிக்கத்துக்கு, தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது! மீண்டும் சொல்கிறேன், டெல்லியின் ஆதிக்கத்துக்கு, தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது! தீ பரவட்டும்! வெல்வோம் ஒன்றாக!” என உரையாற்றினார்.

Related Stories: