ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ஆடுகளின் வரத்து குறைந்து ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம்

*ஒரு ஜோடி ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இதனால், வாரந்தோறும் 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதேபோல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் மற்றும் திருவிழா போன்ற பண்டிகை நாட்களில் பல லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெறும். இதனாலேயே ஒடுகத்தூர் சந்தைக்கு தனி மவுசு உண்டு.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான ஆட்டு சந்தை நேற்று அதிகாலை கூடியது.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆடுகளின் வரத்து அதிகரித்து விற்பனை படு ஜோராக நடந்தது. கடந்த வாரமும் சுமார் ரூ.40 லட்சத்திற்கு வர்த்தகம் இருந்தது.அதேபோல், நேற்று காலை 6 மணி முதலே சந்தையில் கூட்டம் கலை கட்டியது. இருந்தாலும் ஆடுகள் வரத்து குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஒரு ஜோடி ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விலை போகும் ஆனால் நேற்று ஆடுகளின் விலை கிடுகிடுவென குறைந்து ஒரு ஜோடி ரூ.20 ஆயிரம் வரை விலை போனது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், ஆட்டுச்சந்தையில் எப்போதும் ஒரே மாதிரி வியாபாரம் நடக்காது. சீசனுக்கு ஏற்றார் போல் வர்த்தகம் இருக்கும். கடந்த வாரம் நல்ல வியாபாரம் நடந்தது.

ஆனால், அதற்கு மாறாக நேற்று ஆடுகளின் வரத்து வெகுவாக குறைந்து வியாபாரமும் சற்று மந்தகதியில் நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் சந்தையில் விற்பனை மாறுபட்டு கொண்டே இருக்கும்.முந்தைய வாரங்களை விட இந்த வாரம் ஒட்டு மொத்தமாக ரு.10 லட்சத்திற்கும் குறைவாக தான் வர்த்தகம் நடைபெற்றது என்றனர்.

Related Stories: