சின்னமனூர், ஜன.24: சின்னமனூர் நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர் அமைந்திருப்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இங்கு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அய்யனார்புரம் நகராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டப்படுவதில்லை. பொதுவெளிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், வீடுகளில் இருந்து சேகரமாகும் குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
