சத்தியமங்கலம், ஜன.24: பவானிசாகர் அருகே கார் பைக் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் மில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). இவர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் பவானிசாகர்-பண்ணாரி சாலை ராஜீவ் நகர் பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரன் பைக்கின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற அசோக்குமார் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
