×

சாத்தியக்கூறுகள் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.24: சாத்திய கூறுகள் உள்ள ஏரிகளுக்கு, மோட்டார் பம்பிங் முறையில் தண்ணீர் கொண்டு செல்ல, அரசுக்கு முன்மொழிவுகள அனுப்பி வைக்கப்படும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், மா சீசன் தொடங்க உள்ள நிலையில், மா மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துதல், இயற்கை முறையில் சாகுபடியை ஊக்குவித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்று நீரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்.

குறிப்பாக, மோட்டார் பம்பிங் முறையை பயன்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி அணை இடதுபுறக் கால்வாய் அவதானப்பட்டி ஏரியில் இருந்து பாலேகுளி ஏரி வரை செல்லும் நீர் கடத்தும் திறனை அதிகரிக்க, கால்வாயை அகலப்படுத்த வேண்டும். மத்தூர் வட்டாரத்தில் ராகி கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு காய்கறி விற்பனை செய்யும் தள்ளுவண்டி 100 சதவீத மானியத்தில் வழங்கவேண்டும். மா கவாத்து பணிகளுக்கு 1000 மினி பவர் அரவை ரம்பங்கள், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். விவசாய மின் இணைப்பில் இருந்து மா மரங்களுக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு, மின்வாரிய பறக்கும்படையினர் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு கலெக்டர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பதிலளித்து பேசியதாவது: மா விவசாயிகளுக்கு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு புத்தக கையேடுகளும், பயிற்சிகளும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லஇ ஏற்கனவே எண்ணேகொள் கால்வாய் திட்டம், ஆழியாளம் கால்வாய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோட்டார் பம்பிங் முறையில், ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் இல்லை. சாத்தியமுள்ள பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாவட்டத்தில், தென்னை, மா, சிறுதானியம், பயறு வகைகள் மற்றும் இதர வகை வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டும் அலகு அமைப்பதற்கு, பொது பிரிவிற்கு 25 சதவீதம் மானியமும், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவுக்குகு 35 சதவீத மானியமும், அதிகபட்சமாக ரூ.1.5 கோடி என்கிற கணக்கில் 5 சதவீத வட்டி தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது. தட்ரஅள்ளியில் உள்ள 12 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், தென்னை நடவு செய்ய, சிஎஸ்ஆர் நிதியின் மூலம் உடனடியாக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின் போது, கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கைதை கண்டித்து, நேற்று குறைதீர் கூட்டத்தை அந்த சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், வேளாண்மை இணை இயக்குநுர் காளிமுத்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவநதி மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத் துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Krishnagiri ,Farmers' Grievance Redressal Day ,Krishnagiri District Collector's Office ,Farmers' Grievance Redressal Day… ,
× RELATED நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்