சம்மன் அனுப்பி ஆஜராகாத வழக்கு; கெஜ்ரிவால் விடுதலையால் பாஜகவிற்கு பின்னடைவு?.. அமலாக்கத்துறை வழக்கில் அதிரடி தீர்ப்பு

 

புதுடெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை மதிக்கவில்லை என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காகவே இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

இதேபோன்று அக்கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீதும் இதே போன்றதொரு வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் பராஸ் தலால் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கெஜ்ரிவால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்புவது தற்போதைய சட்டங்களின்படி செல்லாது என்றும், ஆஜராகாமல் இருந்தது வேண்டுமென்றே செய்த குற்றம் ஆகாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா பேசுகையில், ‘எங்கள் தலைவர் மீதான சம்மன் தவறானது என்பது உறுதியாகியுள்ளது; இந்தத் தீர்ப்பின் மூலம் அமலாக்கத்துறையின் பொய்கள் அம்பலமாகிவிட்டன; இந்த அரசியல் சதிக்காக பாஜக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்துள்ள டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, ‘தொழில்நுட்ப காரணங்களுக்காகவே இந்தச் சிறிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; முதன்மையான ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் வாய்மை வென்றது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: