இம்பால்: மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த நபர் கடத்திச் சென்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே நீண்ட காலமாக இனக்கலவரம் நீடித்து வருகிறது. அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது இரு தரப்பினரிடையேயும் மோதல்கள் மற்றும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத சில தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்த மயங்லாம்பம் ரிஷிகாந்தா சிங் (38) என்பவர், நேபாளத்திலிருந்து சமீபத்தில் திரும்பிய நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மனைவியுடன் கடத்தப்பட்டார். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவத்தில், குக்கி இனத்தைச் சேர்ந்த அவரது மனைவியை விடுவித்த தீவிரவாதிகள், ரிஷிகாந்தா சிங்கை மட்டும் நட்ஜாங் கிராமத்திற்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்றனர். அவர் உயிருக்குப் போராடும் 1 நிமிடம் 12 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘அமைதி இல்லை, மக்கள் அரசு இல்லை’ என்ற வாசகத்துடன் இந்தத் தாக்குதலை யுனைடெட் குக்கி நேஷனல் ஆர்மி (யுகேஎன்ஏ) என்ற அமைப்பு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கூறுகையில், ‘இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
