மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம் சென்னை- திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்: ஓட்டுநர்கள் அவதி

 

உளுந்தூர்பேட்டை: மதுராந்தகம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன. மேலும் அவசர தேவைக்காக செல்லும் வாகனங்கள் அதாவது அவசர ஊர்தி, பள்ளி பேருந்துகள், அரசு பேருந்துகள், இலகு ரக வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிக்கு பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை முறையான அனுமதி சீட்டு இருந்தால் அனுமதித்து வருகின்றனர்.

இந்த வாகனங்கள் மடப்பட்டிலிருந்து திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மடப்பட்டு மற்றும் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Related Stories: