சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த சங்கராபுரம் தொகுதி 2 முறை அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. அதைப்போல கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியும் மாவட்ட தலைநகரமாகவும், நகராட்சியாகவும் உள்ளது. இந்த தலைநகரை கைப்பற்றுவதில் திமுக, அதிமுகவினரிடையே கடும்போட்டி இருக்கும். இது தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியாகும். விவசாய கூலித்தொழிலாளர்களும், விவசாயிகளும் அதிகம் நிறைந்த பகுதி.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்ட பிறகு அதாவது கடந்த 2011ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட அழகுவேல் என்பவரும், 2016ல் அதிமுகவின் பிரபு என்பவரும், 2021ல் அதிமுகவின் செந்தில்குமாரும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். 3 முறையாக தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றதால், 2026லும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து அதிமுக சார்பில் மேற்கண்ட மூன்று பேர் உட்பட புதுவரவு சிலரும் மல்லுகட்டுகின்றனர்.
இவர்களில் பிரபு மாநில பொறுப்பில் உள்ளார். அவரது தந்தை அய்யப்பா ஒன்றிய சேர்மனாகவும், ஒன்றிய செயலாளராகவும், தாய் தைலம்மாள் துணை சேர்மனாகவும் இருந்துள்ளனர்.
பிரபு தற்போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ அழகு வேல்பாபுவின் கணவர் பாபு நகர செயலாளராக இருந்து வருகிறார். சிட்டிங் எம்எல்ஏ செந்தில்குமார் மாவட்ட செயலாளர் குமரகுருவின் கருணையால் வெற்றி பெற்றவர். இந்த முறையும் விருப்பமனு கொடுத்துள்ளார். எடப்பாடியும் மேடையில் பேசும் போதெல்லாமல் சாதாரண குடும்பத்தை சேர்ந்த எளிமையான ஒருவருக்கு சீட் கொடுத்து வெற்றி பெற வைத்துள்ள கட்சி அதிமுக என்று முழங்கி வருகிறார். அதனால் இவருக்கு தலைமை மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம்.
மேலும் அதிமுகவில் புதிய வரவாக கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மனாக இருந்த தங்கபாண்டியன், பெரியசெருவத்தூர் மணி, ராஜிவ்காந்தி போன்றோரும் களத்தில் உள்ளனர். இந்த தேர்தல் அதிமுகவை பொருத்தவரை வாழ்வா சாவா என்ற தேர்தல். அதனால் புதியவர்களை வேட்பாளராக்க அதிமுக தலைமை விரும்புமா என்பது சந்தேகம்தான். இதுவரை நடந்த தேர்தலைவிட இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். பணம் செலவு செய்யக்கூடிய வகையில் வேட்பாளர் தேவை என்றால் பிரபு, அழகுவேல் பாபு இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அதுவும் கட்சியில் இளையவரான பிரபுவுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடும் போட்டி நிலவுவதால் முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள் பதைபதைப்பில் உள்ளனர்.
