×

திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர வாய்ப்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு

திருவண்ணாமலை, ஜன.23: கட்டுமான தொழிலாளர்களின் குழுந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வேதநாயகி தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின், உயர்கல்வி உதவித்தொகை பெறுவோரின் குழந்தைகளுக்கு 40 பயிற்சி பிரிவுகளில் இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்கும் குழந்தைகள், நடப்பு கல்வியாண்டில் முறையான பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் டிப்ளமோ, ஐடிஐ படிப்போர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் உயர் கல்வி பயில்வதற்கான உதவித்தொகை பெற்றிருக்க வேண்டும். அல்லது உதவித்தொகை பெற விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளரின் இரண்டு குழந்தைகள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். பயிற்சியில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள், கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளரான தங்களின் தந்தை அல்லது தாயோடு அனைத்து அசல் ஆவணங்களுடன் திருவண்ணாமலை காந்தி நகர் 8வது தெருவில் செயல்படும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai District ,Assistant Commissioner ,Labour ,Vedhanayaki ,Tamil Nadu Construction Workers Welfare Board ,
× RELATED மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு...