உத்திரமேரூர்,ஜன.23: உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் கிராமத்தில் கனிமவள நிதியின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் செல்வகுமரன் அனைவரையும் வரவேற்றார். காஞ்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் விஷ்ணு, முரளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
