×

எஸ்ஐஆர் பணிகளில் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் ஒரு சிறப்பு திருத்தத்தை நடத்த அனுமதிக்கிறது என்று தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்தார்.

அப்போது, எஸ்ஐஆர் படிவத்தில் இடம் பெற வேண்டிய ஆவணங்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்த பரிந்துரைகளை ஆதரிக்கவோ அல்லது நீக்கவோ முடியுமா என்பது குறித்து பதில் அளிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரே முகவரியில் ஒரே பெற்றோரின் குழந்தைகளாக 200-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வாக்காளர் பட்டியல்களை திருத்துவதற்கான நடத்தை என்பது, நீதிக்கான கொள்கைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் எஸ்.ஐ.ஆர். பணிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : SIR ,Supreme Court ,Electoral Commission ,Delhi ,Election Commission ,West Bengal State ,
× RELATED ஐதராபாத் அருகே தனியார் பயணிகள்...