வேடசந்தூர், ஜன. 22: வேடசந்தூர் வசந்தா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (62). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பாக நின்றிருந்தார். அப்போது காம்பவுண்ட் கேட்டுக்குள் சுமார் 3 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. பாம்பை கண்டதும் லட்சுமி அலறிடித்து வெளியே ஓடி வந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பாம்பு அங்கிருந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் நுழைந்து மறைந்து கொண்டது.
இதுகுறித்து உடனே வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மழைநீர் தொட்டிக்குள் இருந்த ஜல்லி கற்களை அகற்றி தண்ணீரை உள்ளே விட்டனர். சுமார் அரை மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு பாம்பு மறைந்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கருவியின் மூலம் பாம்பை பிடித்தனர். தொடர்ந்து பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
