ஜெயங்கொண்டம், ஜன.21: ஜெயங்கொண்டத்தில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்பு கூலியாக ரூபாய் 20 வழங்க கோரி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர் தியாகராஜன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் தனவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உட்கோட்டை ரமேஷ், முத்து, கிருஷ்ணமூர்த்தி, குணா, தர்மராஜ், கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், கறிக்கோழி வளர்ப்பு கூலியாக ஒரு கிலோவுக்கு ரூ.20 கம்பெனிகள் தர வேண்டும். ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்தி வளர்ப்பு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும்t. தரமான 50 கிராம் எடையுள்ள குஞ்சுகளை கம்பெனிகள் தர வேண்டும். கோழிப்பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் மானியத்துடன் கடன் வசதி செய்து தர வேண்டும். கோழிப்பண்ணை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும்.
கடந்த காலத்தைப் போல தமிழக அரசே கோழி குஞ்சுகளை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 5 முதல் 8 பேட்ஜ் குஞ்சுகளை வழங்க வேண்டும். கோழி இறந்தால் அதனை வீடியோ எடுத்து கம்பெனிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற லைவ் நடைமுறைகளை கம்பெனி கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
