சபரிமலை ஐயப்பனின் சொத்தை கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர்: 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் காட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனின் சொத்தை கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர் என்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பதருதீன் கூறினார். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், தேவசம் போர்டின் முன்னாள் அதிகாரிகள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் தலைவர் பத்மகுமார் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நகை வியாபாரி கோவர்தன் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று நீதிபதி பதருதீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கம் திருட்டு தொடர்பாக அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி பதருதீன் கூறியது: சபரிமலை ஐயப்பனின் சொத்தை கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 4 கிலோ 147 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது. இதில் சுமார் 400 கிராம் தங்கம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. மீதமுள்ள தங்கம் எங்கே போனது? அதை உடனடியாக மீட்க வேண்டும். இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

* ரூ 1.3 கோடி சொத்துக்கள் முடக்கம்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைமை அலுவலகம் உள்பட 26 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் சோதனை தொடர்பான சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் விவரங்கள் வருமாறு: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் ரூ. 1.3 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் இருந்து 100 கிராம் தங்கக் கட்டி கைப்பற்றப்பட்டது. தங்கத் தகடுகளை செம்புத் தகடுகள் என்று போலியான ஆவணம் தயாரித்து சபரிமலையில் இருந்து வெளியே கொண்டு சென்றனர். இந்த போலி ஆவணமும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Stories: