சென்னை: வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் மெட்ரிக் பிரிவில் 10ம் வகுப்பு படித்துவரும் மாணவனின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகனுக்கு தமிழ் தெரியாது. அவனது தாய் காஷ்மீரில் வசித்தவர். மாணவன் ஒன்பதாம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வந்ததால் பிரெஞ்ச் மொழியை பகுதி-1 மொழியாக தேர்வு செய்து படித்தான். தற்போது, தமிழகத்தில் படிப்பதால் தமிழ் மொழி கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, எனது மகன் இந்த ஆண்டு மெட்ரிக் தேர்வை எழுதும்போது பிரெஞ்ச் மொழியை இரண்டாவது மொழியாக தேர்வு செய்து எழுத அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 20026-2007 கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் தமிழ் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம் தாய் மொழியாக இல்லாத மாணவர்கள் அவர்கள் தங்களின் தாய் மொழியை இரண்டாம் மொழியாக தேர்வு செய்யலாம். பள்ளி நிர்வாகம் மனுதாரரின் மகனுக்கு தவறாக சேர்க்கை வழங்கியுள்ளது என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளியும், மாணவனின் பெற்றோர் செய்த தவறுக்காக மாணவனின் கல்வியை பாழாக்கிவிட முடியாது.
மாணவன் தனது கல்வியை தொடர வேண்டும். எனவே, மனுதாரரின் மகன் இந்த கல்வி ஆண்டு மட்டும் இரண்டாவது மொழியாக பிரெஞ்சை எழுதலாம். இதை சிறப்பு உத்தரவாக பிறப்பிக்கிறேன். மாணவன் 11 மற்றும் 12ம் வகுப்பில் பிரெஞ்ச் இரண்டாவதாக மொழியாக உள்ள கல்வி திட்டத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வரும்காலத்தில் மனுதாரரின் மகன் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் அல்லது இந்தி கட்டாயம் என்பது தொடர்பாக எந்த நிவாரணத்தையும் கோர முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
