×

செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

செங்கோட்டை, ஜன. 22: செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் தேவையில்லாமல் சர்வாதிகார போக்கில் செயல்படும் நகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்தும், தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப், இஎஸ்ஐ பணத்தை உடனடியாக அலுவலகங்களில் செலுத்திடக்கோரியும் காலை 6 மணி முதல் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி தூய்மை பணியாளர் சங்க துணைத்தலைவர் முருகேஸ்வரி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் குட்டி,ஜோதி, குத்தலிங்கம், சக்திவேல், பகவதிராஜ் உட்பட 65க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் செல்வராஜிடமும், நெல்லை மண்டல இயக்குனரிடம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் காலை 8.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், பிஆர்பி தூய்மைப்பணி ஒப்பந்த உரிமையாளர் 65க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் ஏழு மாத காலம் பிடித்தம் செய்த பிஎப், இஎஸ்ஐ பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மண்டல இயக்குனர் தொலைபேசியில் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டதாக தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் கூறினார்.

Tags : Sengottai Municipality ,Sengottai ,PF ,ESI ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை