கூடங்குளம்,ஜன.22: விஜயாபதி ஊராட்சி தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி நான்காவது நாளாக போராட்டம் நடந்து. நேற்று வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் விஜயாபதி ஊராட்சிக்கு உட்பட்ட தோமையார்புரம் மீனவ கிராமத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கடற்கரை பகுதி முழுவதும் கடல் அரிப்பினால் பெரிய அளவில் சேதமாகி உள்ளது. மீன்பிடி தொழில் செய்ய முடியாத அளவிற்கு நாட்டுப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்க கூட முடியாத அளவிற்கு கடலரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல குடும்பங்கள் தொழிலை தேடி வெவ்வேறு கிராமங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இங்கு தூண்டில் பாலம் அமைப்பதற்கு சுமார் 30.20 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட அறிக்கை அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில் அரசு பல்வேறு காரணங்களை காட்டி இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் தோமையார்புரம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்து தர அரசினை வலியுறுத்தி பல்வேறு மனுக்களை வழங்கி வந்த நிலையில், இங்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறி இப்பகுதி மக்கள் கடந்த 7ம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லாத காரணத்தினால் கடந்த 18ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை அறிவித்து போராடி வருகின்றனர் நேற்று 4வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று 4வது நாளில் மக்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து நிதி திரட்டும் போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
