சிவகாசி: சூழலியல் சீர்கேடுகளை மாற்ற மாணவர்கள் மக்கள் இயக்கமாகத் திரள வேண்டும் என சிவகாசியில் நடைபெற்ற “ஒரு கிராமம் ஓர் அரசமரம்” திட்ட துவக்க விழாவில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசினார். பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரலின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அரச மரம் நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம்’ மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திற்கான திட்ட துவக்க விழா சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் இன்று (21/01/26) நடைபெற்றது.
இவ்விழாவில் பேரூர் ஆதீனத்தின் 25-வது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முதல் மரக்கன்றை நட்டு விருதுநகர் மாவட்டத்திற்கான மரம் நடும் பணிகளை துவங்கி வைத்தார். அப்போது அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் C.அசோக், சிவகாசி பசுமை மன்றத்தின் நிறுவனர் ரவி அருணாச்சலம், செல்வக்குமார், ஈஷா காவேரி கூக்குரல் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.
இவ்விழாவில் பேசிய பேரூர் ஆதீனம், “ஒரு அரச மரம் நம்முடைய ஊருக்கு வருவதால் என்ன நன்மை என்று நீங்கள் நினைக்கலாம், இருக்கக்கூடிய மரங்களிலேயே அதற்குத்தான் ‘அரச மரம்’ என்று பெயர். ஏனென்றால் அதிலிருந்து வெளிப்படக்கூடிய காற்று அதிக அளவிலான ஆக்ஸிஜன் கொண்டது. நம்மவர்கள் அரச மரம் இருந்தால் பக்கத்திலேயே ஒரு வேப்ப மரத்தையும் வைப்பார்கள். அந்த வேப்ப மரமும் அரச மரமும் இணைந்து வெளியிடக்கூடிய காற்று, நம்முடைய உடலுக்கும் மன நலத்திற்கும் மிகச் சிறந்தது.
அரச மரத்தைச் சுற்றி வரும்போது நமக்குத் தூய்மையான காற்று கிடைக்கிறது, பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சனைகள் நீங்கி உடல்நலம் மேம்படுகிறது. முன்பெல்லாம் பள்ளிக்கூடங்கள் அரசு மரத்தடியிலும் ஆல மரத்தடியிலும் தான் நடந்தன. கல்வியைக் கொடுத்ததும் இந்த மரங்கள்தான்.
இன்று ஒரு செடி வைத்தால் அது தற்காலிகப் பயனைத் தரும். ஆனால் இந்த ‘அரச மரம்’ என்பது நம்முடைய சந்ததிகளுக்கு மிகப்பெரிய நன்மையைத் தரும். ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் இந்த நல்ல திட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. இதற்காக ஈஷா ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் தன்னார்வலர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது.“ எனக் கூறினார்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், “சத்குரு, 2004-ஆம் ஆண்டு பசுமை கரங்கள் இயக்கத்தினை துவங்கிய போது, ஒரு கிராமத்தில் 5 அரச மரங்கள் வைத்தால் அது அங்குள்ள மக்களின் உடல் மற்றும் மன நிலையில் பெரிய மாற்றத்தினை உருவாக்கும் எனக் கூறினார். பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவர்களுடன் இணைந்து இந்த “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை மாவட்டம் தோறும் துவங்கி செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரை கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்த திட்டம் துவங்கப்பட்டு இதுவரை 3,888 கிராமங்களில் அரச மரங்கள் நடப்பட்டுள்ளன. இன்று விருதுநகர் மாவட்டத்தில் துவங்கி உள்ளோம். தமிழகத்தின் 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் குறைந்தபட்சம் 5 அரச மரங்களையாவது நட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
தமிழகத்தில் அழிந்து வரும் அரிய வகை மரங்களை மீட்டெடுத்து, விருதுநகர் மாவட்டத்தைப் பசுமையாக்கும் சிவகாசி பசுமை மன்றத்தின் செல்வகுமார் அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. உலகளவில் 40 சதவீத நிலம் பாலைவனமாகிவிட்டதாக ஐநா சபை எச்சரித்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 30 சதவீதம் குறையும் அபாயம் உள்ளது.
இந்தச் சூழலியல் சீர்கேடுகளை மாற்றியமைக்க மாணவர்கள் ஒரு மக்கள் இயக்கமாகத் திரள வேண்டும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் யாரோ நட்ட மரத்திலிருந்து கிடைக்கிறது. அதேபோல் அடுத்த தலைமுறைக்காக நாம் எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். குறிப்பாக, சிவகாசி போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் ஒவ்வொரு மாணவரும் மண்ணுக்கேற்ற அரசமரம் போன்ற நாட்டு மரங்களை நட்டு வளர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும். உங்களின் இந்தச் சிறு முயற்சிதான் எதிர்காலப் பஞ்சத்தைத் தடுக்கும் மிகப்பெரிய மாற்றமாக அமையும்’. எனக் கூறினார்.
