வாடிப்பட்டி, ஜன. 21: சமயநல்லூர் அருகே, நேற்று அரசு பேருந்து கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பழங்காநத்தம் கிளையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று நேற்று கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்தை மதுரையை அடுத்த பைகராவைச் சேர்ந்த மார்நாடு (40) என்பவர் ஓட்டிவந்தார். சமயநல்லூர் அருகே கட்டப்புளிநகர் எனும் இடத்தின் அருகே வந்தபோது, சொகுசு கார் ஒன்று பேருந்தை முந்திச்செல்ல முயன்றது. அப்போது பேருந்தின் ஓட்டுநர் கார் மீது மோதாமல் இருக்க, பக்கவாட்டில் திருப்பியுள்ளார். ஆனால் எதிர்பாராத வகையில் பேருந்து பக்கவாட்டில் இருந்த மேம்பால தடுப்புச்சுவரில் ஏறியது.
இதனால் நிலைதடுமாறிய பேருந்து கார் மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் கார் ஓட்டுநர் மட்டும் லேசான காயமடைந்தார். அரசுப்பேருந்தில் இருந்த பயணிகள் உள்ளிட்ட யாரும் காயமின்றி தப்பினர். அதனை தொடர்ந்து திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த உடனடியாக சம்பவ இடம் வந்த சமயநல்லூர் போலீசார் கவிழ்ந்த பேருந்தை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்து நடைபெற்ற இதே கட்டபுளிநகரில் நேற்று முன்தினம் மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் பழநி நோக்கி சென்ற அரசு பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்ததனர். இந்நிலையில் நேற்று கோவையிலிருந்து மதுரை வந்த அரசு பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.
