மதுரை, ஜன. 21: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. மதுரையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் என, லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், தங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மதுரை, பெரியார் பஸ் ஸடாண்ட் பகுதியில் நேற்று சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் விசாலாட்சி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் துணை தலைவர்கள் சுப்புராஜ், இந்திராணி, வனிதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் இணைந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் உட்பட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
