கொள்ளிடம், ஜன.21: கொள்ளிடம் அருகே வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கீரங்குடி, மாதிரவேளூர், கொன்னக்காட்டுபடுகை, வாடி, வடரங்கம், கட்டியமேடு, பாலூரான்படுகை, சென்னியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் காட்டுப்பன்றிகள் தொடர்ந்து புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சம்பா நெற்பயிரில் புகுந்து நெற்பயிரை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கடந்த ஆறு மாத காலமாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகளுக்கு நெற்பயிரில் நஷ்டத்தை ஏற்படுத்தி சேதம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அவைகளை பாதுகாப்பாக பிடித்து காட்டுப்பகுதியில் விட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் தெற்கு ராஜன்வாய்க்கால் பாசனதாரர் சங்க நிறுவனர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
