திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய அதிரடி உத்தரவு லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பெண்களே அதிகம் பாதிப்பு: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்களே உள்ளனர் எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு கொண்ட பின், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக பிரபாகரன் என்பவர் மீது, மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.மதி முன் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் மனோஜ் ஆஜராகி, ‘‘மனுதாரரும், புகார் அளித்த பெண்ணும் பள்ளி காலத்திலிருந்து காதலித்துள்ளனர். மனுதாரர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து 2019ல் இருந்து பாலியல் உறவு கொண்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் காதலை பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் இருவரும் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததால், பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார். பின்னர் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். எனவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார். தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் உள்ளனர். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. இதற்கு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

திருமணம் சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண்கள் சட்ட விதிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும். இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவாக பிஎன்எஸ் பிரிவு 69 உள்ளது. இந்த வழக்கில் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. இருப்பினும் மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: