பத்ம புராணம் என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது புராணமாகும். இந்தப் புராணம் சாத்விக புராண வகையைச் சார்ந்ததாகும். பிரம்மதேவனின் பத்ம கல்பத்தில் எழுதப்பட்டதால் இது பத்ம புராணம் என்று அழைக்கப்படுகிறது.ஒரு காலத்தில் இந்த பூமியே ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால், இதற்குப் பத்ம புராணம் என்று பெயர். வேத வியாசருக்குப் பின், இப்புராணம் மேலும் சுருக்கப்பட்டு ஏழு காண்டங்களையும், 55,000 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது.
இந்த காண்டங்கள் 1. சிருஷ்டி காண்டம்; 2. பூமி காண்டம்; 3. சுவர்க்க காண்டம்; 4.பிரம்ம காண்டம்; 5. பாதாள காண்டம்; 6. உத்தர காண்டம்; 7. கிரியா யோகா முதலியனவாகும்.
சிவசர்மாவின் கதை
முன்னொரு காலத்தில் பல முனிவர்கள் ஒன்றுகூடி உரோம ஹர்ஷணரிடம் பத்ம புராணத்தைத் தங்களுக்குக் கூறுமாறு வேண்டினர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உரோமஹர்ஷனரே சிவ சர்மாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.துவாரகையில் சிவசர்மா என்பவர் வாழ்ந்து வந்தார். வேதங்கள், வேதாங்கங்கள் சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த சிவசர்மா மந்திர சக்தியால் பல அற்புதங்களைச் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
அவருக்கு யக்ஞ சர்மா, வேத சர்மா, தர்ம சர்மா, விஷ்ணு சர்மா, சோம சர்மா என்ற ஐந்து புதல்வர்கள் இருந்தனர். தம்முடைய பிள்ளைகளின் அன்பையும் பணிவையும் சோதிக்க எண்ணியவர் தன்னுடைய சக்தியால் தன் மனைவி போலவே ஒரு மாயப் பெண்ணை உருவாக்கி அந்தப் பெண்ணை இறந்து போகுமாறு செய்தார். மூத்த மகனை அழைத்தார்.“உன் தாய் இறந்துவிட்டாள். இனி பயன்படமாட்டாள். அவளுடைய உடம்பை கத்தியால் வெட்டி துர எறிந்துவிடு” என்று சொன்னவுடன் மூத்த மகன் அப்படியே தந்தையின் கட்டளையை மீறாது செய்தான்.
அடுத்து தன்னுடைய மாயா சக்தியால் அழகு வாய்ந்த பெண்ணை உருவாக்கி தன்னுடைய இரண்டாவது மகனை அழைத்து, “மகனே, இந்தப் பெண்ணை நான் மணந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இவள் சம்மதிக்கவில்லை. இவளைச் சம்மதிக்க வைப்பது உன் பொறுப்பு” என்று சொன்னவுடன் தந்தையின் கட்டளையை மீறாத இரண்டாவது மகன்,அந்தப் பெண்ணிடம் தன் தந்தையை மணந்து கொள்ளுமாறு வேண்டுகின்றான்.
அந்தப் பெண் மறுக்கிறாள்.“உன்னுடைய தந்தை வயதானவர். நோயுற்றவர். எனவே, நான் அவரை மணந்து கொள்ள முடியாது.. வேண்டுமானால் உன்னை மணந்துகொள்கிறேன்” என்கிறாள். இரண்டாவது மகன் பதறிப்போய், “இல்லை இல்லை. என்னுடைய தந்தையை நீ திருமணம் செய்து கொண்டால் நீ கேட்பதை நான் தருகிறேன்” என்று சொன்னவுடன், அந்தப் பெண், “அப்படியா, ஒன்று செய். உன் தலையை வெட்டி என் கையில் கொடு. உன் தந்தையை மணந்து கொள்கிறேன்” என்று விபரீதமாகக் கேட்கிறாள். இரண்டாவது மகன் சற்றும் யோசிக்காது உடனே தன் தலையை வெட்டி அந்தப் பெண்ணின் கையில் கொடுக்கிறான்.
இப்பொழுது அடுத்த சோதனையை சிவ தர்மா மூன்றாவது மகனிடம் ஆரம்பித்தார். இரண்டாவது மகனின் தலையை மூன்றாவது மகனிடம் கொடுத்து, “நீ என்ன செய்வாயோ தெரியாது. தர்ம தேவதையிடம் வேண்டி உன் சகோதனுக்கு உயிர் தர வேண்டும்” என்று சொல்ல, மூன்றாவது மகன் உக்கிரமாக தவம் செய்து தர்ம தேவதையைப் பிரார்த்தனை செய்கிறான்.தர்மதேவதை தோன்றி “ என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க .”என் அண்ணனின் உயிரைத் தரவேண்டும்” என்று வேண்ட, உடனடியாக தர்மதேவதை, அவன் அண்ணனைப் பிழைக்க வைக்க, இருவரும் மகிழ்ச்சியோடு தந்தையாகிய சிவசர்மாவைச் சந்தித்தனர்.
அடுத்து நான்காவது மகனை அழைத்தார்.
“மகனே, இந்திரனிடம் கொஞ்சம்
அமிர்தம் வாங்கி வா “என்றார்.
நான்காவது மகனாகிய விஷ்ணு சர்மா இந்திரலோகம் சென்று இந்திரனிடம் அமிர்தத்தைக் கேட்க,” உனக்கு அமிர்தம் வேண்டாம். வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் “என்று இந்திரன் சொல்ல, அவனோ பிடிவாதமாக அமிர்தமே வேண்டும் என்றான்.விஷ்ணு சர்மாவை மயக்குவதற்காக மேனகையை அனுப்புகின்றான் இந்திரன்.மேனகை அவனிடம் சென்று,” நீ ஏன் அமிர்தத்தைக் கேட்கிறாய். நானே ஒரு அமிர்தம். நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்” என்று அவனுடைய மனதை மாற்ற முயற்சி செய்கிறாள்.
அவன் “இல்லை… இல்லை… நான் என் தந்தையின் கட்டளைப்படி அமிர்தம் பெறுவதற்காக வந்திருக்கிறேன். அது கிடைக்காமல் இங்கிருந்து போக மாட்டேன்” என்று உறுதியுடன் கூறினான். அடுத்து இந்திரன் பல துர்தேவதைகளை அனுப்பி விஷ்ணு சர்மாவின் மனதைக் கலைக்க முயற்சி செய்தான். எதற்கும் மசியாத விஷ்ணு சர்மா அமிர்தம் பெறுவதில் உறுதியாக இருந்தான்.
வேறு வழியில்லாமல் இந்திரன், அமிர்தத்தை விஷ்ணு சர்மாவிடம் கொடுக்க, விஷ்ணு சர்மா தந்தையாகிய சிவசர்மாவிடம் அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.சி வசர்மா மகிழ்ந்து தன்னுடைய சொல்லை மீறாத நான்கு பிள்ளைகளும் விஷ்ணு லோகம் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
ஐந்தாவது பிள்ளை சோம சர்மாவை அழைத்தார்.“நானும் உன் தாயாரும் தீர்த்த யாத்திரை போகிறோம். அதுவரை இந்த அமிர்தத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்” என்று கொடுத்துவிட்டு தீர்த்த யாத்திரை கிளம்பினார்.பலகாலம் அலைந்த பிறகு உடல் தளர்ந்து தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஐந்தாவது மகனிடம் வந்து சேர்ந்தார்.ஐந்தாவது மகன் முகம் சுழிக்காமல் தன் தந்தைக்கு வேண்டிய உபச்சாரங்கள் செய்தான். அவன் எவ்வளவு உபச்சாரம் செய்தாலும் அவனை சோதிப்பதற்காக சிவசர்மா மகனென்றும் பாராமல் திட்ட ஆரம்பித்தார். ஆனால், தந்தையின் கெடு பிடிகளையும் கோபத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவருக்குப் பணிவிடை செய்துவந்தான்.
ஒரு நாள் சிவசர்மா “நான் அமிர்தம் கொடுத்தேனே, அதைக் கொண்டுவா” என்றார்.ஆனால், தன்னுடைய மாயா சக்தியினால் அமிர்தத்தை இவரே காணாமல் போகுமாறு செய்திருந்தார். தந்தையின் கட்டளையை மீறாமல் அமிர்தத்தைத் தேடியபோது அது அங்கு இல்லை.சற்றும் கலங்காத சோம சர்மா தன்னுடைய சக்தியினால் அமிர்தத்தை வரவழைத்து அதை தந்தையிடம் கொடுக்க தன்னுடைய ஐந்தாவது பிள்ளையின் சக்தியைக் கண்டு தந்தையாகிய சோம சர்மா மகிழ்ந்து ஆசீர்வதித்தார்.அதோடு அவர் அவர் தன்னுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு விஷ்ணுலோகம் சென்றுவிட்டார்.
இப்போது ஐந்தாவது பிள்ளையான சோமசர்மா தனிமையில் விடப்பட்டு தந்தை இல்லாமல் வாடினான். தந்தையின் நினைவாகவே இறந்தும் போனான். ஆனால், அடுத்த பிறவியில் இரணியன் மகன் பிரகலாதனாக பிறந்தான் என்று கதை போகிறது.இந்தக் கதையில் வித்தியாசமாக பிரகலாதனின் பிறப்பு சொல்லப்படுகிறது. தந்தைக்கு பணிவிடை செய்ததால், இவன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக திகழ்ந்தான் என்று இந்தக் கதை முடிகிறது.
இந்தக் கதை நம்ப முடியாதபடி சொல்லப்பட்டிருந்தாலும் இதில் அடிப்படையான மூன்று விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
1. தந்தையின் கட்டளையை மீறாதபிள்ளைகள் இருந்தனர்.
2. தந்தையின் கட்டளையை மீறாத அவர்கள் நன்மைகள் பெற்றனர்.
3. தந்தை திட்டினால் கூட பொருட்படுத்தாமல் பணிவிடை செய்பவர்கள் விஷ்ணு பக்தர்களாக பிறந்து நற்கதி அடைந்தனர்.
தீர்த்த யாத்திரை தனியாகச் செய்ய வேண்டுமா? மனைவியுடன் செய்ய வேண்டுமா? என்பதை விளக்குவதற்காக ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.வாரணாசியில் கிரிகலா என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி சுகலா.
கிரிகலா ஒருமுறை தீர்த்த யாத்திரை கிளம்பிய போது மனைவி சுகலா தானும் வருவேன் என்று தயாரானாள்.
“தீர்த்தயாத்திரை சாதாரணமானது கிடையாது. வழியில் நிறைய பிரச்சனைகள் வரும். அந்தக் கஷ்டத்தை உன்னால் தாங்க முடியாது” என்று சொல்லியும் அவன் மனைவி தானும் வருவேன் என்று அடம் பிடித்ததாள்.
மனைவியிடம் சொல்லாமலேயே கிரிகலா தீர்த்த யாத்திரை கிளம்பி விட்டான்.
மனைவி இதை அறிந்து சாப்பாடும் உறக்கமும் இல்லாமல் பட்டினி கிடந்தாள். உறவினர்கள் எவ்வளவு சொல்லியும் அவள் உண்பதாகவோ தூங்குவதாக இல்லை.“என்னிடம் சொல்லாமல் கணவன் யாத்திரை போய்விட்டான் .அவன் என்னை ஒதுக்கிவிட்டான் என்றுதான் பொருள். எனவே நான் இந்த நோன்பு நோற்கத் தான் வேண்டும்” என்றாள் அவள்.
இதற்கு நடுவில் அவளைப் பரிசோதிப்பதற்காக ஒருவர் வந்து “அம்மா,உன் கணவன் தீர்த்த யாத்திரையில் இறந்துவிட்டான். நீ வேறு மணம்புரிந்துகொள். வேண்டுமானால் என் எஜமானரை நீ மணந்து கொள்ளலாம்” என்று சொல்ல, சுகலா கேட்டாள் . “உன் னுடைய எஜமானன் யார்? அவனைக் கூப்பிடு” என்றாள். இந்திரன் தோன்றினான்.
உடனே அவள் கடுமையாக “ இந்திரனாக இருந்துகொண்டு இதைப் போன்ற காரியங்களில் செய்யலாமா?” என்று இந்திரனை கடுமை யாகக் கோபித்துக் கொண்டு அனுப்பி விட்டாள்.இதற்கிடையில் அவளுடைய கணவன் தீர்த்த யாத்திரை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.
அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது.“அப்பா, நீ ஆயிரம் தீர்த்தங்களில் நீராடினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. உன்னுடைய முன்னோர்கள் அனைவரும் இன்னும் நரகத்தில்தான் இருக்கிறார்கள். உன்னுடைய தீர்த்த யாத்திரையில் பலனில்லை” என்று சொல்ல இவன் அழுது கொண்டே, “அப்படி என்ன நான் தவறு செய்தேன்?” என்று கேட்க, அந்த அசரீரி சொல்லியது.“உன்னையே நம்பி இருக்கும் உன் மனைவியை அழைத்துச் செல்லாமல் நீ தனியாக யாத்திரை சென்றது பாவம். உடனே, மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள். மகிழ்ச்சி தரும் படி சேர்ந்து வாழ்க்கை வாழுங்கள். தானதர்மம் செய்யுங்கள். முன்னோர்கள் நற்கதி அடைவார்கள். என்று சொல்லியது.
அதோடு இந்திரன் சுகலாவிடம் சென்று “பதிவிரதா தர்மத்தை கடைப்பிடித்த உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று சொல்ல, நாங்கள் சத்திய தர்ம வழியில் இருந்து தவறாமல் இருக்க வேண்டும் அதோடு நாங்கள் வாழ்கின்ற இடம் நாரி தீர்த்தம் என்ற பெயரோடு புண்ணிய ஸ்தலமாக விளங்க வேண்டும் “என்று வரம் கேட்க இந்திரனும் அந்த வரத்தைத் தந்து மறைந்தான் என்று கதை போகிறது.
இதில் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்.
1. கணவன், மனைவி இருக்கும் பொழுது தனியாக புண்ணிய காரியங்களைச் செய்து பலனில்லை.
2. மனைவியோடு சேர்ந்துதான் தான தர்மங்களையும் புண்ணிய தல யாத்திரைகளையும் செய்ய வேண்டும்.
முனைவர் ஸ்ரீராம்
