×

லீலாசுகர் வில்வமங்களும் குரூரம்மையும்

பகுதி 2

‘‘கண்ணா! கண்ணா! ஏன் வரமாட்டேன் என்கிறாய்?” என்று நான்கு திசைகளிலும் கைகளை நீட்டிக் கதறியபடி ஓடினார். அப்போது ஆகாயத்தில் இருந்து அசரீரி கேட்டது; ‘‘உத்தம பக்தா! வில்வமங்கள்! நீ என்னிடம் மிகுந்த பக்தி. கொண்டவன்தான்; இதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் அசையாத பக்தியுடன் என்னை வழிபடும் குரூரம்மைக்கு, நீ துயரம் உண்டாக்கினாய்.

‘‘என்னால் அதை ஏற்க முடியாது. குரூரம்மையை நீ, சமாதானப் படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால்தான், உன்னால் என்னை முன்போல் காண முடியும். ‘‘வில்வமங்கள்! நீ மூன்று ஜன்மங்களாகத்தான் எம்மை வழிபட்டு வருகிறாய். ஆனால், குரூரம்மையோ, ஏழு… எட்டு… பிறவிகளாக எம்மை வழிபட்டு வருகிறார். எம்மைக் காண வேண்டும் என்ற விருப்பம், உண்மையிலேயே உனக்கு இருந்தால், குரூரம்மையைச் சமாதானப்படுத்து! பிறகே எம்மை க் காணலாம் நீ!” என்றது, அசரீரி.

வில்வமங்கள் வியந்தார்; பகவானுக்கு பக்தர்களிடம் உள்ள அன்பை நினைத்து நெகிழ்ந்தார். அதன்பின் விநாடி நேரம்கூடத் தாமதி்க்க வில்லை வில்வமங்கள்; ஒரே ஓட்டமாகக் குரூரம்மையின் வீடு நோக்கி ஓடினார்.‘‘அம்மா! அடியேனை மன்னித்து விடுங்கள்! மன்னித்து அருள் புரியுங்கள்!” என வேண்டினார், வில்வமங்கள்.அதை ஏற்றார் குரூரம்மையார். அவர் சம்மதத்துடன் தன் இருப்பிடம் திரும்பிய வில்வமங்கள், குரூரம்மையின் பக்தியையும், அதற்குக் கண்ணன் எளிமையாக ஆட்பட்ட தன்மையையும் நினைந்து நினைந்து நெகிழ்ந்தார். கண்ணனும் பழையபடியே, வில்வமங்களுக்குக் காட்சி தருவதும் விளையாடுவதுமாக இருக்கத் தொடங்கினார்.

அதே சமயம் குரூரம்மையும் அந்த நிலையிலேயே இருந்தார்; ‘‘நம்மிடம் குழந்தையாய் இருக்கும் கண்ணன், இந்த வில்வமங்களுடன் விளையாடி, இவர் பாடும் பாடல்களுக்கெல்லாம் தலையசைக்கிறார் என்றால், இந்த வில்வமங்கள் எவ்வளவு உயர்ந்தவராக இருக்க வேண்டும்! இவரை மறுபடியும் பிச்சைக்கு அழைத்து உபசரிக்க வேண்டும்” என எண்ணினார்.

அதற்கேற்றாற்போல் அடுத்த சந்தர்ப்பம் வாய்த்தது. சில மாதங்கள் ஆயின. திருச்சூரில் உள்ள நடுவில் மடம் என்ற இடத்தில் இருந்து, பட்டதிரி ஒருவர் வில்வமங்களைப் பிச்சைக்கு அழைத்தார். வில்வமங்களும் வருவதாக ஒப்புக் கொண்டார்; அதற்கேற்ப பிச்சைக்கு முதல்நாள் மாலையே, அந்த ஊருக்குச் சென்றார். அடுத்தநாள் காலை; பிச்சைக்கு ஒப்புக் கொண்ட நாள். பிச்சைக்கு அழைத்தவரின் வீட்டிலிருந்த பெண்மணி, அருகில் உள்ள குளத்தில் நீராடச் சென்றார். அதேநேரத்தில் குரூரம்மையும் அக்குளத்திற்கு நீராட வந்தார்.

இரு பெண்மணிகளும் பல விஷயங்களையும் பேசியபடியே, நீராட்டத்தை முடித்துக் கொண்டார்கள். பிச்சைக்கு அழைத்தவரின் இல்லத்தைச் சேர்ந்த பெண்மணி, ‘‘அம்மா! நான் புறப்படுகிறேன். தவறாக நினைக்காதீர்கள். நான்போய், வில்வமங்கள ஸ்வாமிகளுக்குப் பிச்சை தயாரிக்க வேண்டும்” என்றார். குரூரம்மைக்கு விவரம் தெரிந்தது. அதன்பின் இரு பெண்மணிகளும் அவரவர் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். இல்லம் வந்த குரூரம்மைக்கு இருப்பு கொள்ளவில்லை; ‘‘நம் இல்லத்தின் அருகிலேயே வில்வமங்கள் ஸ்வாமிகள் வருகை புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை அழைத்து, நான் பிக்ஷையிட வேண்டாமா? ஏற்கனவே, அவருக்குப் பிச்சையிட முடியாமல் போய் விட்டது. இந்த வாய்ப்பை விடக் கூடாது” என்று எண்ணினார் குரூரம்மை.

உத்தமர்களின் நல்ல எண்ணமும் தீயவர்களின் தீய எண்ணமும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரும். அதுவும் உத்தமர்களில் உயர்ந்தவரான குரூரம்மையின் எண்ணம் கேட்க வேண்டுமா? குரூரம்மை உடனே முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து, ‘‘நேரே வில்வமங்கள ஸ்வாமிகளைப் போய்ப் பார்த்து, ‘‘இன்று என் இல்லத்தில் பிச்சையேற்க வேண்டும்’ என நான் சொன்னதாகச் சொல்ல வேண்டும்” எனச்சொல்லி அனுப்பினார். முக்கியஸ்தர், வில்வமங்கள் தங்கியிருந்த இடத்திற்குப் போய், குரூரம்மை சொன்ன தகவல்களைச் சொன்னார்.வில்வமங்களோ, ‘‘இன்று பட்டத்திரியின் இல்லத்தில் பிச்சைக்கு வருவதாக ஒப்புக்கொண்டு, அதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன். வேறொரு நாள் வருகிறேன்” என்றார். முக்கியஸ்தர் திரும்பி வந்து, குரூரம்மையிடம் தகவலைச் சொன்னார்.

ஆனால், குரூரம்மை உறுதியாகச் சொன்னார்; ‘‘இன்று ஸ்வாமிகளின் பிச்சை என்வீட்டில்தான். அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வாருங்கள்!” என முக்கியஸ்தரை மறுபடியும் வில்வமங்களிடம் அனுப்பினார்.முக்கியஸ்தரும் போய், வில்வமங்களிடம் சொல்லிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பினார். வில்வமங்கள் தான் இருந்த இடத்தில் இருந்து, பிச்சைக்குப் புறப்பட்டார்.

சன்யாஸிகளுக்கு யாத்திரை சமயங்களில், சில நியமங்கள் நடைமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்று சங்கு ஊதுவது. சங்கின் ஓசையைக் கேட்காமல், சன்யாசிகள் யாத்திரை புறப்படக் கூடாது என்பது சம்பிரதாயம். சன்யாசிகள் பிரம்ம ரூபிகள். ஆகவே, நாத பிரம்மமான சங்கின் ஓசை ‘பிரணவம்’ என்ற எண்ணத்தில், துறவிகள் யாத்திரை புறப்படும் நேரங்களில் சங்கு ஊதுவது சம்பிரதாயம்.

அந்த முறைப்படி அன்று வில்வமங்கள் பிச்சைக்குப் புறப்பட்ட போது, சங்கு ஊதத் தொடங்கினார்கள். சங்கில் இருந்து ஓசை வெளிவரவில்லை; என்னவெல்லாமோ முயற்சிசெய்து பார்த்தார்கள்; பலனில்லை. வில்வமங்கள் உட்பட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.ஒரு சில விநாடிகள்தான். வில்வமங்கள் மனதிற்குள் நினைத்தார்; உண்மை புரிந்தது; ‘‘அனைத்தும் கண்ணனின் மாயா விலாசம். இன்று பிச்சை குரூரம்மையின் வீட்டில்தான்” என்று மனதிற்குள் தீர்மானம் செய்த வில்வமங்கள், ‘‘இப்போது ஊதுங்கள் சங்கை!’’ என்றார்.

சங்கு ஊதுபவர்கள் ஊதத் தொடங்கினார்கள். சங்கிலிருந்த நாத ஓசை வெளிப்பட்டது. பிறகு என்ன? வில்வமங்கள் குரூரம்மையின் வீடு நோக்கிப் பிச்சைக்குப் புறப்பட்டார்.வீடு தேடிவந்த வில்வமங்களைப் பார்த்ததும் குரூரம்மை மகிழ்ந்தார்; எதிர் நோக்கிச் சென்று வரவேற்று உபசரித்தார்.அதே சமயம் வில்வமங்களின் பார்வை, அங்கே ஒரு குழந்தை அவரைப் பந்தலில் ஏறி அவரைக்காய்கள் பறிப்பதில் பதிந்தது. வில்வமங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அக்குழந்தை கீழே இறங்கித் தானும் வில்வமங்க ளை எதிர் கொண்டழைத்து, முறைப்படி வரவேற்று உபசரித்தது.

கண்ணன் தான் அங்கே குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தார் வில்வமங்கள். அவர் மனம் கண்ணனின் எளிமையை எண்ணி உருகியது. குரூரம்மை, வில்வமங்களை அன்போடு பூஜித்து, அவருக்குப் பிச்சை (உணவு) இட்டார். வில்வமங்கள் உண்டு முடித்ததும், அவர் உண்ட இலையிலிருந்த மீதியை உண்டு மகிழ்ந்தார் குரூரம்மை.  அங்கு நடந்த அனைத்தையும் அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருந்த வில்வமங்கள், தன்னை அறியாமலே ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

‘‘என்னுடைய அறியாமையாலோ, அகம்பாவத்தாலோ பகவானின் மாயை காரணமாக நான் செய்த தவறுகளை, மன்னித்து அருள வேண்டும்! இதைத்தவிர அடியேன் சொல்வதற்கு வேறொன்றுமில்லை” என்று பிரார்த்தித்தார் வில்வமங்கள். அதேசமயம் பகவான் புன்முறுவல் பூத்தபடி அங்கே வெளிப்பட்டு, ‘‘வில்வமங்கள்! அகில உலகங்களு்க்கும் மூலப் பரம்பொருளாக இருக்கும் நான், இந்த இல்லத்தில் இருக்கும் குரூரம்மையின் எண்ணத்தைக் காப்பாற்றிக் கொண்டு, இங்கே இப்படிப் பணிவிடை செய்வதைக்கண்டு, நீ ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

‘‘உன் வாழ்விலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே! பக்தர்களுக்குத் தாசனாக இருந்து கொண்டு, அவர்களின் மனோபாவத்திற்கு ஏற்றவாறு செயல்படுபவன் நான்- என்பது உனக்கும் தெரிந்தது தானே!” என்றார். பகவானின் வார்த்தைகளைக் கேட்ட வில்வமங்கள், குரூரம்மையை வணங்கி விடை பெற்றார்.(குரூரம்மையையும் வில்வமங்களையும் இணைத்துப் பலவிதமான அபூர்வ சம்பவங்கள் சொல்லப்படும்). வீடு திரும்பிய வில்வமங்கள், முன்னிலும் தீவிர பக்தியுடன் – ஏகாக்கிர சித்தனாக; கண்ணனையே தியானிக்கும் ஒருநிலைப்பட்ட மனம் உடையவராக; எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் கண்ணனையே காணும் சித்தம் உடையவராக; கண்ணனுக்கும் தனக்கும் பேதமில்லை எனவும் நினைத்து; ஆனந்தத்துடன் இருந்து தனக்குண்டான செயல்களை முறையாகச் செய்து வந்தார்.

மூன்று காலங்களிலும் விசேஷ நிவேதனங்கள் – வேத மந்திரங்கள் என, பகவானை வழிபட்டு வந்தார். கண்ணனும் வில்வமங்கள் முன்னால் வழக்கப்படி தோன்றி விளையாடினார். வில்வமங்களும் கண்ணனுடன் கொஞ்சி-கெஞ்சி என விளையாடி மகிழ்ந்தார். அவருடைய பக்குவ நிலையும் பயன்கருதாப் பக்தியும் கண்ணனைக் கவர்ந்தன. பகவான் நினைத்தார். ‘‘இதற்குமேல் தாமதிக்கக் கூடாது. வில்வமங்களைச் சரியானபடி மோக்ஷத்தில் சேர்க்க வேண்டும்” எனத் தீர்மானித்தார். தீர்மானித்ததைச் செயலிலும் காட்டினார்.

ஒருநாள்… வில்வமங்கள் பூஜைக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். வழக்கப்படி காட்சி தந்து விளையாடும் கண்ணன், ஒன்றும் தெரியாதவரைப்போல பூஜைப் பொருட்களை எல்லாம், தாறுமாறாகச் செய்து கொண்டிருந்தார். அவற்றை வில்வமங்கள் சரியாக வைப்பதும்; கண்ணன் கலைப்பதுமான செயல்கள் நடந்தன.

கண்ணன் அத்துடன் நிறுத்தவில்லை; பூஜையின்போது பகவானுக்குச் சாற்ற வேண்டிய சந்தன மாலையை எடுத்து, வில்வமங்களின் கழுத்தில் போட்டார்; சந்தனத்தை எடுத்து, வில்வமங்களின் மார்பில் தேய்த்தார்; விக்ரஹத்தில் சாற்றப்பட்டிருந்த கோபி சந்தனத்தைத் துடைத்தார்; பகவானுக்கு அர்ச்சனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மலர்களை எடுத்து, வில்வமங்களின் தலையில் தூவினார். அத்துடன் வில்வமங்களின் முன்னால் அலங்காரக் கண்ணனாகக் காட்சியளித்து, விளையாடவும் செய்தார். கண்ணனின் திருவிளையாடல்கள் மேலும் தொடர்ந்தன. வில்வமங்களைத் தெய்வமாக எண்ணி, தான் அவருடைய பக்தனாக இருந்து, வில்வமங்களுக்குப் பூஜை முதலானவைகளைச் செய்யத் தொடங்கினார் கண்ணன்.

அந்த நேரத்தில் கண்களைப் பாதி மூடிக் கையில் ஜபமாலை ஏந்தியபடி ஜபம் செய்து கொண்டிருந்த வில்வமங்கள், கண்களைத் திறந்து பார்த்தார்; தன்னைப் பூஜை செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் கண்ணன் செய்து கொண்டிருந்தது, வில்வமங்களுக்குத் தெரிந்தது; கையில் இருந்த ஜபமாலையைப் ‘பளிச்’சென்று பீடத்தில் வைத்துவிட்டு, எழுந்து விலகி நின்றார்.

குழந்தை வடிவில் இருந்த கண்ணன், மறுபடியும் தன்பூஜை செயல்களைத் தொடர்ந்தார்; வில்வமங்களுக்கு நமஸ்காரம் செய்ய முனைந்தார். அதைக்கண்டு வில்வமங்களுக்கு நடுக்கம் உண்டானது.‘‘கண்ணா! அப்பா! இது கூடாதப்பா கூடாது” என்று சொல்லிப் புறங்கையால் கண்ணனைச் சற்று தள்ளி நிறுத்தினார். சற்று தள்ளி நின்ற கண்ணன் முகம் வாடியது; கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது; அப்படியே ஆகாயத்தில் எழுந்து மறைந்தார்.

அது கண்டு வில்வமங்கள் அடியற்ற மரம்போல் தரையில் விழுந்தார். ‘‘எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். என் அருமை கண்ணனைத் தள்ளி விட்டேனே! கண்ணன் எங்கு போனார்? காணவில்லையே! இது என்ன கஷ்டம்? என் மனதிற்கும் கண்களுக்கும் ஆனந்தம் அளித்து, என்னுடனேயே விளையாடிக் கொண்டிருந்த கண்ணன், எங்கு போனார்?” என்று புலம்பி, பூஜை செய்யப்பட்ட மலர்களில் விழுந்து உருண்டு அழுதார்.

அப்போது, பாதி திறந்திருந்த பூஜை அறையிலிருந்து குரல் மட்டும் கேட்டது; ‘‘உத்தம பக்தனே! தவறான காரியங்களைச் செய்து விட்டு, இப்போது வருந்தி என்ன பயன்? தன் வீட்டில் உள்ள முல்லைக்கு மணம் இருக்காது என்பார்கள். அதுபோலத்தான் ஆகி விட்டான் கண்ணனும். அதனால் தான் கண்ணன் செய்தவைகளில், தவறு கண்டுபிடிக்கிறாய் நீ! என்னதான் குற்றம் செய்திருந்தாலும், தாயான யசோதை கூடக் கண்ணனைத் தன் புறங்கையால் தள்ளியதில்லை; தொட்டது கூடக் கிடையாது. அவளுக்கு எவ்வளவு அன்பிருந்தால், அப்படி இருந்திருப்பாள்” என்றது அசரீரி.

அதைக் கேட்டு வில்வமங்களின் வருத்தம் அதிகமானது. ‘‘கண்ணா! ஒருபோதும் நீ என்னை விட்டுப்போகக் கூடாது. தூய்மையான பக்தியோடும் பிரேமையோடும் இருக்கும் என் உள்ளம் எப்போதும் சத்தியத்திலேயே மூழ்கி இருக்கிறது. உன் வேணுகானத்தில் மயங்கிக் கிடக்கும் என்னைப்பற்றி, உனக்குத் தெரியாதா?” என்றார் வில்வமங்கள். வில்வமங்களின் கேள்விக்குப் பகவான் பதில் சொன்னார். ‘‘அருள்பெற்ற கவி நீ! ஞானி! பக்தன்! எனப் பெயர் பெற்ற நீ, இந்த அளவிற்கு ரசிகத்தன்மை இல்லாதவன் எனத் தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால், கோபிகைகளைப்போல உன்னையும் ஒரு தோழனாக நினைத்திருப்பேனா? என்னுடன் விளையாட்டுத் தோழனாக இருக்கத் தகுதியற்றவன் நீ! உன்னை விட்டுப் பிரிந்துபோக விரும்புகிறேன் நான்” என்றார்.

‘‘கண்ணா! என் மனது முழுவதுமாகக் கண்ணன் திருவடிகளில்தான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; இது உனக்கே தெரியும். மாயை காரணமாக இருக்கின்ற இந்த வேற்றுமை காரணமாக நீ என்னை விட்டுப் பிரிந்தால், என்னுடைய இந்தப் பிறவியே பயனற்றதாக ஆகிவிடும். என் வாழ்வுக்கே ஆதாரமாக இருக்கும் நீ, எதையாவது சொல்லி என் பார்வையில் படாமல் இருக்கக் கூடாது” என வேண்டினார், வில்வமங்கள்.

‘‘இனி என்னைக் காண ஆர்வம் இருந்தால், அனந்தன் காட்டில் தரிசிக்கலாம் என்னை” என்ற பகவான், அங்கிருந்து மறைந்தார்.எந்த ஒன்றையும் இழந்த பின்தான், அதன் அருமை தெரியும் என்பதற்கு இணங்க, கண்ணன் காட்சி இல்லாமல் ‘‘அனந்தன் காடு எங்கே இருக்கிறது?” என்று தேடிப் புறப்பட்டார் வில்வமங்கள்.‘‘இனி எந்தக் காரியமும் கிடையாது. அனந்தன் காட்டில் பாலகிருஷ்ணனைக் கண்டாலன்றி, ஓய்வே கிடையாது எனக்கு” என்று தீர்மானித்த வில்வமங்கள், அனந்தன் காட்டைத் தேடிக் காடு-மலையெல்லாம் சுற்றித் திரிந்தார்.

அவருடைய மனமெல்லாம் கண்ணனிடமே இருந்தது; யாரைக் கண்டாலும், ‘‘புல்லாங்குழல் ஊதிக்கொண்டு மேகசியாம வண்ணத்தில், கண்ணன் போனதைப் பார்த்தீர்களா? அனந்தன் காடு எங்குள்ளது?” என்று கேட்டபடியே சென்றார்; ஆளரவமில்லாத காடு-மலைப் பகுதிகளில் கூட, அதே வார்த்தைகளைச் சொன்னபடித் தேடிக் கொண்டிருந்தார்; உணவு, உறக்கம் பற்றிய சிந்தனையே இல்லாமல் நாள் கணக்காக முள்ளிலும் கல்லிலும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்.அப்போது, ‘‘டேய்! துஷ்டப் பயலே! என் பேச்சைக் கேட்காமல் இதேபோல் அழுது கொண்டிருந்தால், உன்னை அனந்தன் காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவேன்” என ஒரு குரல் கேட்டது.

(தொடரும்)

பி.என்.பரசுராமன்

Tags : Leelasukar Vilvam ,Kururamma ,Kanna ,Vilvam ,
× RELATED பாட்டினில் அன்பு செய்!