17.1.2026 – சனி திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருடவாகனம்
108 பெருமாள் தளங்களில் திருவள்ளூரில் உள்ள திருத்தலம் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் இத்தலத்தில் சித்திரை மாதத்திலும் தை மாதத்திலும் ஆண்டுக்கு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெறும். தை அமாவாசை அன்று சாலி ஹோத்திர மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்ததால் தை மாத பிரம்மோற்சவம் சிறப்பானது. பிரமோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் காலை மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். அதில் மூன்றாம் நாளான இன்று காலை வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தருகிறார்.
18.1.2026 – ஞாயிறு தை அமாவாசை
அமாவாசை என்றது மிகப் புனிதமான முக்கியமான தினம். அன்று தென்புலத்தார் என்று போற்றப்படுகின்ற முன்னோர்களுக்கு நாம் வழிபாடு நடத்துகின்றோம். பன்னிரண்டு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும்கூட, உத்தராயண காலத்தில் வருகின்ற தை அமாவாசையும், தட்சிணாயண காலத்தில் வருகின்ற ஆடி அமாவாசையும் முக்கியமானது. இன்று முற்பகலில் பிதுர்க் காரியங்களை மேற்கொள்ளலாம். காலையில் வீட்டை தூய்மைப்படுத்தி, நீராடி, வெளியிலே வாசலுக்கு கோலம் போடாமல், உச்சிப் பொழுது வருவதற்குள் முன்னோர்கள் காரியத்தை நிறைவேற்றிவிட வேண்டும். உணவுக்காகவும் தாகத்திற்காகவும்எள்ளும் நீரும் அளித்து, பின் தூய்மையான உணவுகளைச் சமைத்து, தலைவாழை இலை போட்டுப் படைக்க வேண்டும். காகத்திற்கு உணவிட வேண்டும்.
பிற்பகலில் அதாவது உச்சிப் பொழுது கடந்த பிறகு இந்தப் பணிகளைச் செய்யக்கூடாது. இது மிகச் சிறப்பான அமாவாசை. இதன் மூலமாக முன்னோர்களுடைய ஆசிகள் முழுமையாகக் கிடைக்கும். இந்த தை அமாவாசையில் தான் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி பாடினார். இன்று மாலை அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம்.
18.1.2026 – ஞாயிறு நாங்குநேரி எண்ணெய் காப்பு
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து நான்குநேரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் தோதாத்ரிநாதர், அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் ஸ்ரீ தெய்வநாயக பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி சகிதமாகவும், ஆண்டாள், வரமங்கை நாச்சியாருடனும் சேவை சாதிக்கிறார். திருக்கோயில் வெளிப் பிரகாரத்தில் எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இங்கு பெருமாளுக்கு காப்பிடப்படும் எண்ணெய் முழுவதும் சேகரிக்கப்படப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் பிணி தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. தை அமாவாசை அன்று எண்ணெய் காப்பு வழிபாடு மிகுந்த சடங்குடன் நடைபெறுகிறது.
19.1.2026 – திங்கள் சியாமளா நவராத்ரி
வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு. அதில் தை மாத அமாவாசை முதல் 9 நாட்கள் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும். அம்பாளுக்கு ராஜசியாமளா ஸ்ரீ மாதங்கி என்று பலவிதமான திருநாமங்கள். மதங்கமா முனிவரின் மாதவப் புதல்வி அவதரித்த விசேஷமான நவராத்திரி இது. தசமஹாவித்யாக்களில் ஒன்பதாவது வித்யை இது. ஒருவருக்கு கலையோ பேச்சுத்திறனோ, கூர்மையான புத்தியோ, வித்தைகளில் மேம்பாடோ அடைய வேண்டும் என்று சொன்னால், இவளை வணங்க வேண்டும். வேத மந்திரங்களுக்கு அதிதேவதையாக விளங்குபவள். லலிதா பரமேஸ்வரியின் மந்திரியாக விளங்குபவள். இந்த அம்பிகையை போற்றும் விழாதான் சியாமளா நவராத்திரி. சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபம் என்று இவளைச் சொல்வார்கள். கலை தெய்வம் என்று சொல்வார்கள்.
சரஸ்வதி தேவியைப் போலவே கையில் வீணையை வைத்துக் கொண்டிருப்பாள். சாம்பலும் கருப்பும் நிறம் என்பதால் சியாமளை என்று சொல்வார்கள். தை அமாவாசையில் ஆரம்பித்து ஐந்தாவது தினமான பஞ்சமியில் திரு அவதாரம் செய்ததாகச் சொல்வார்கள். இந்த ஒன்பது நாட்களும் வீட்டிலோ, இல்லை கோயிலிலோ, அம்பாளை சிறப்பு பூஜை செய்து வணங்குவதன் மூலமாக, எல்லாவிதமான கலைகளையும் அடையலாம். தம்பதிகள் ஒற்றுமையோடு வாழலாம். மனக் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். சகல யோகங்களும் சித்திக்கும்.
19.1.2026 – திங்கள் திருநாங்கூர் 11 கருடசேவை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அடுத்துள்ளது மணிமாட கோயில் என்று அழைக்கப்படும் திருநாங்கூர் நாராயண பெருமாள் திருக்கோயில். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருடசேவை நடைபெறுவது வழக்கம். திருநாங்கூருக்கு உள்ளேயே திருக்காவளம்பாடி கோபாலன் கோயில் திரு அரிமேய விண்ணகரம், குடமாடு கூத்தர் ஆலயம், திருவண்புருடோத்தம பெருமாள் கோயில், திருச்செம்பொன் செய்கோயில் செம்பொன்ரங்கர் ஆலயம், திருமணிமாடக் கோயில் நாராயண பெருமாள் ஆலயம், திருவைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர் கோயில் ஆகியவையும், திருநாங்கூருக்கு வெளியே திருதேவனார் தொகை மாதவப் பெருமாள் கோயில், திருத்தெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் கோயில், திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள் ஆலயம், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில், திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. பதினொரு கருடசேவையின்போது பதினொரு திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாட நாராயண பெருமாள் கோயிலில் ஒன்று கூடுவார்கள். அப்போது அந்த பெருமாள்களுக்கு மங்களாசாசனம் செய்யப்படும். இதற்காக ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்க திருமங்கை ஆழ்வார் வருவதாக ஐதீகம்.
19.1.2026 – திங்கள் சோமசிரவணம்
திருவோண நட்சத்திரம் சந்திரனுக்குரிய நட்சத்திரம். திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாள். இரண்டும் சேர்ந்த தினம் “சோம சிரவணம்’’ என்று அழைக்கப்படுகிறது. வருடத்தில் ஓரிருநாள் இப்படி வரும். இந்த நாளில், திருவோண விரதம் இருந்து, பெருமாளை வணங்குவதன் மூலமாக சகல நன்மைகளையும் பெறலாம். இன்று செய்யக்கூடிய பூஜைகளும் வழி பாடுகளும் பல மடங்கு பலன் தரும்.
22.1.2026 – வியாழன் முகுந்த சதுர்த்தி வர சதுர்த்தி
சதுர்த்தி தினம் பொதுவாக பிள்ளையாருக்கு உரியது சங்கடங்களை போக்கும் சதுர்த்தி தினம் என்பார்கள். ஆனால், தை அமாவாசை முடிந்து வருகின்ற சதுர்த்தி தினத்தை வரகுந்த சதுர்த்தி தினம் என்று சொல்வார்கள். இந்த சதுர்த்தி தினத்தில் காலையில் எழுந்து நீராடி மனத் தூய்மையோடு பக்கத்தில் உள்ள ஏதேனும் சிவன் கோயிலுக்குச் சென்று வருவது அற்புதமான பலன்களைத் தரும். வரமுகுந்த சதுர்த்தி அன்று மல்லிகை பூக்களால் சிவபூஜை செய்ய காரியத்தடைகள் நீங்கும்.
22.1.2026 – வியாழன் அப்பூடியதிகள் குருபூஜை
கும்பகோணம் திருவையாறு சாலையில் திருவையாறுக்கு அருகே உள்ள தலம் திங்களூர். இங்கே வாழ்ந்தவர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது காணாமலே காதல் கொண்டு அவர் பெயரிலேயே தர்மங்கள் பலவற்றைச் செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் திங்களூர் கைலாசநாதரை வணங்க எழுந்தருளுகிறார் திருநாவுக்கரசர். ‘‘ஐயா, இந்தத் திங்களூரில் எங்கு பார்த்தாலும் “தர்மம், தர்மம்” என்று தர்ம சாலைகள் நிறைந்திருக்கிறதே, இதனை இத்தனை ஊக்கத்தோடு நடத்தும் அறவழிச் செல்வர் யார்?’’ வினாவுக்கு விடையாக அப்பூதியடிகளே அங்கு வந்து விடுகிறார். அப்பூதி அடிகளாரைப் பார்த்துக் கேட்கிறார்.‘‘சிவனடியார் பொருட்டு நீங்கள் தர்மம் செய்கிறீர்கள். உங்கள் பெயர் எழுதாமல் யாரோ திருநாவுக்கரசர் என்று போட்டிருக்கிறீர்கள், என்ன காரணம்?’’ அதுவரை அமைதியாக இருந்த அப்பூதி அடிகளாருக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. “நாவுக்கரசரை யாரோ என்று கேட்கும் இவர் சிவனடியார் தானா?’’ என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் திருநாவுக்கரசு சுவாமிகளின் பெருமைகளை அவரிடமே பேசுகிறார். பின் அவர்தான் திருநாவுக்கரசர் என்று அறிந்து நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குகிறார். வீட்டிற்கு விருந்துண்ண அழைக்கிறார். திருநாவுக்கரசரும் அடியாரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். விருந்து தயாராகிவிட்டது. விருந்துக்கு முன் வாழை இலை பறிக்க செல்கிறான் அப்பூதியடிகளின் மகன் திருநாவுக்கரசு. அங்கே மறைந்திருந்த பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். திருநாவுக்கரசர் வெளியே சென்று வீட்டுக்கு வரும் நேரம். திருநாவுக்கரசர் அறிந்தால் கஷ்டப்படுவார்… என்ன செய்வது? பிள்ளையின் சடலத்தை ஒரு பாய் வைத்து மறைத்து, சோகத்தைக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தயங்காமல் செய்கின்றனர்.திருநாவுக்கரசரும் வந்து விட்டார். ‘‘ஆமாம், இங்கேவிளையாடிக் கொண்டிருந்த தங்கள் புதல்வன் எங்கே? கூப்பிடுங்கள். என்னோடு விருந்து உண்ணட்டும்’’ என்று கேட்கும் போது தான் அதுவரை இல்லாத மயக்கம் வருகின்றது.
‘‘சுவாமி அவன் தங்களுக்கு இப்போது உதவான்’’ அவன் இறந்துவிட்டான் என்று சொல்லவில்லை.‘‘ஒரு கணம் திகைத்தார் திருநாவுக்கரசர் உண்மையைச் சொல்லும்’’ என்று கேட்க நடந்த கதையைச் சொன்னார்கள். நீலம் பாரித்துக் கிடந்த பிள்ளையை கொண்டு வந்து கிடத்துகிறார்கள். அடுத்து அவர் உதட்டிலிருந்து பரம கருணையோடு வெளிப்படுகின்றது ஒரு பதிகம். ஒன்று கொலாம் என்ற பதிகத்தை உருக்கமுடன் பாடுகிறார். அந்த பதிகத்தை விடம் தீர்க்கும் பதிகம் என்பார்கள். திருநாவுக்கரசரின் தமிழமுதம் அந்த பச்சிளம் பாலகனைக் காத்தது. தூங்கி எழுந்தவன் போல் எழுந்து வந்து பெற்றோர்களைக் கட்டிக் கொள்கின்றான். திருநாவுக்கரசர் திருப்பாதங்களில் சிறுவனோடு விழுந்து பணிகின்றார்கள். ஆண்டவனிடம் அடிமைப் பூண்டவர் நாவுக்கரசர். நாவுக்கரசரிடம் அடிமை பூண்டவர் அப்பூதி அடிகளார். இன்று அப்பூதி அடிகளாரின் குரு பூஜை நாள்.
23.1.2026 – வெள்ளி வசந்த பஞ்சமி
வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாள் வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி நாளன்று குழந்தைகளின் கல்வி துவங்குகிறது. இந்நாளில் குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் ஆர்வமும், எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை.வசந்த பஞ்சமி அன்று, சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர் மாலைகள் அணிவித்து பூஜை செய்கின்றனர். பூஜையில் வைக்கப்படும் விநாயகரும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சரஸ்வதி தேவிக்கு படையல் வகைகளும் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளான்று பெண்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிகின்றனர். தமிழ்நாட்டில் வசந்த பஞ்சமி நாளை, காமதேவனைப் போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
23.1.2026 – வெள்ளி காஞ்சி உலகளந்த பெருமாள் திருவிழா
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தை மாதத்தில் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இதில் கொடியேற்றம், கருடசேவை, மற்றும் ஸ்ரீ தேவி பூதேவியுடன் பெருமாள் வீதி உலா வருவது போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். மேலும், இந்த கோயிலில் திருஊரகம், திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வனம் என நான்கு திவ்ய
தேசங்களும் அடங்கியுள்ளன.
விஷ்ணுபிரியா
