யூடியூபர் சங்கர் விவகாரத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்: போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

புதுடெல்லி: யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘யூடியூப் சங்கர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி ஆறு மாதங்களில் முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யூடியூபர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “முன்னதாக பதியப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போது தற்போது மீண்டும் யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார். சங்கர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து ஆறு மாதத்தில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா மற்றும் சபரீஸ் சுப்ரமணியன்,‘‘பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தான் யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார். இதில் அவர் மீது மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,‘‘யூடியூபர் சங்கர் விவகாரத்தில்,அவர் மீது நிலுவையில் இருந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து ஆறு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து, அந்த ஒரு வரியை மட்டும் நீக்கம் செய்து உத்தரவிடுகிறோம். இருப்பினும் ஆதாரங்களின் அடிப்படையில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையை காவல்துறை தொடரலாம். என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: