புதுடெல்லி: அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,’’இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்றி விட்டு புதிய பெயரை பரிந்துரை செய்ய வேண்டும் என்று, முன்னதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நாங்கள் பரிந்துரை கொடுத்திருக்கிறோம்.
குறிப்பாக இந்த வழக்கை தாமதப்படுத்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் எங்களது தரப்பின் முக்கிய கோரிக்கை என்னவென்றால், குற்றம் புரிந்த, அதற்கு உடந்தையாக இருந்தவர்களை மட்டும் முதலில் பிரதானமாக விசாரிக்க வேண்டும். அப்போது தான் வழக்கில் தீர்வு விரைவாக முடியும் என தெரிவித்தார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,”இந்த வழக்கில் வாதிட்டு வந்த மூத்த வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தினால் வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். இதுகுறித்த கடிதம் முன்னதாகவே உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
