விற்றுத்தீர்ந்த விமான டிக்கெட்: தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம்

சென்னை: பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் டிக்கெட் இல்லாததால் பயணிகள் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, மதுரை விமானங்களுக்கு டிக்கெட் இல்லாததால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் டிக்கெட்டில் முன்பதிவு செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வழக்கமான விமான கட்டணம் ரூ.3,889; இன்று ரூ.9,797 வசூல் செய்யப்படுகிறது. பெங்களூர் வழியாக இணைப்பு விமானத்தில் திருவனந்தபுரம் செல்ல ரூ.15,218 வசூல் செய்யப்படும் நிலையில், பயண நேரமும் அதிகமாகிறது. சென்னையில் இருந்து கோவை செல்லும் அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்றுத்தீர்ந்தது. இதனால் இணைப்பு விமானங்களில் கோவை செல்ல ரூ.3,499 கட்டணத்துக்கு ரூ.16,500 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

விமான எண்ணிக்கையை குறைத்ததே பாதிப்புக்கு காரணம்

தமிழ்நாட்டில் இயக்கும் விமானங்களை விமான நிறுவனங்கள் பெருமளவு குறைத்ததே இதற்கு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை, மதுரைக்கு சென்னையிலிருந்து, தினமும் 16 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக பெரிய விமானங்கள் இயக்குவதாக கூறி விமான எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கு வருகை, புறப்பாடு என 8 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது நான்காக குறைந்து விட்டது. தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சிக்கு இயக்கப்பட்ட விமானங்களை, சில நிறுவனங்கள் காரணமின்றி நிறுத்தி விட்டன.

Related Stories: