ஒரு கோடி வாக்காளர்களை நீக்க பா.ஜ.க. கூட்டணி சதி: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 1 கோடி பேரை நீக்க பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின்போது வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். உண்மையான வாக்களர்களை மொத்தமாக நீக்கியுள்ளதாகவும் அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால் தங்களது பெயரை உறுதி செய்துகொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்தபடியே, பாஜகவால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி பெயர்களை நீக்கியதாக கூறிய மம்தா பானர்ஜி இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள், திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்றிய பெண்களின் பெயர்களை நீக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கெல்லாம் மேலாக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம், இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து மேலும் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.

Related Stories: